உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் ட்ராலி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் இந்த விபத்து நடந்துள்ளது. ட்ராக்டரில் இருந்த மக்கள் பக்வத் கதா நிகழ்ச்சிக்காக கரா ஆற்றிலிருந்து நீரெடுக்கச் சென்றனர். அப்போது அந்த விபத்து நடந்துள்ளது.


12 பேர் உயிரிழப்பு:


விபத்தின் போது ட்ராக்டர் ட்ராலியில் 30க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இது குறித்து ஷாஜஹான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பலரும் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். சம்பவ இடத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபட்டனர். 


மகாராஷ்டிராவிலும் விபத்து:


முன்னதாக இன்று அதிகாலை மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நடந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து பகுதியில் ஆய்வு செய்த காவல்துறை கண்காணிப்பாளர், "தனியாருக்குச் சொந்தமான பேருந்தில் பாரம்பரிய இசைக்குழு கலைஞர்கள் பயணித்தனர். அவர்கள் அனைவரும் புனேவில் ஒரு நிகிழ்ச்சியை முடித்துக் கொண்டு மும்பை சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் பேருந்து எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்தவர்களில் 12 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து கோப்போலி காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.


இந்தியாவில் சாலை விபத்துகள்:


தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கையின்படி இந்தியாவில் ஒவ்வொரு 6 நிமிடமும் ஒரு இந்தியர் சாலை விபத்தில் அதுவும் அதிவேகமாக வாகனத்தை இயக்கி நடக்கும் விபத்தில் உயிரிழக்கிறார். அதேபோல் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு இருவர் அதிவேகமாக வாகனத்தை இயக்குவதால் காயமடைகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அந்த புள்ளிவிவரத்தின் படி கடந்த ஆண்டு (2021) வேகமாக வாகனம் ஓட்டி நடந்த விபத்துகளில் 87,050 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்கள் 11,190 பேர் உயிரிழந்தனர். 2,28.274 பேர் காயமடைந்தனர். நாட்டில் 60 சதவீதம் சாலை விபத்துகளுக்கு அதி வேகத்தில் வாகனத்தை இயக்குவதே காரணமாக உள்ளது. இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 4,03,116 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதுவே 2020 ஆம் ஆண்டில் 3,54,796 ஆக இருந்தது. அதேபோல் 2021ல் சாலை விபத்தில் உயிரிழப்புகள் 1,55,622 ஆக அதிகரித்துள்ளது. 2020ல் சாலை விபத்தில் உயிரிழப்புகள் 1,33,201 ஆக இருந்தது.


அதிக சாலை விபத்துகள்:


2020-ஐ விட 2021-ல் மிக அதிகமாக சாலை விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டில் 57,090 சாலை விபத்துகளும், மத்தியப் பிரதேசத்தில் 49,493 விபத்துகளும், உத்தரப் பிரதேசத்தில் 36,509 விபத்துகளும், மகாராஷ்டிராவில் 30,086 விபத்துகளும், கேரளாவில் 33,501 விபத்துகளும் நடந்துள்ளன. இறப்பு விகிதத்தைப் பொருத்தவரை மொத்த விபத்துகளில் 3,73,884 பேர் காயமடைந்தனர், 1,73,860 பேர் உயிரிழந்தனர். இவர்களில் உத்தரப்பிரதேசத்தில் 24,711 பேர் இறந்தனர். தமிழகத்தில் 16,685 பேர் இறந்தனர். மகாராஷ்டிராவில் 16,446 பேர் இறந்தனர். இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமே முறையே 14.2%, 9.6% மற்றும் 9.5% சாலை விபத்து உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன. மொத்தமாக இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் 33.3 சதவீத இறப்பு பதிவாகியுள்ளது.