புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே ஒரு நபர் தீயிட்டு கொளுத்தி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே ஒரு நபர் தீயிட்டு கொளுத்தி கொண்டுள்ளார். உடனே, உள்ளூர் மற்றும் ரயில்வே போலீசார் பொதுமக்கள் சிலருடன் சேர்ந்து அந்த தீயை அணைத்தனர். இதையடுத்து, நாடாளுமன்ற வளாகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினர், அவரை ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரது உடல் 95 சதவிகிதம் எரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீக்குளித்த நபரால் பரபரப்பு:
இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத்தை சேர்ந்த ஜிதேந்திரா என்ற அந்த நபர், ரயில்வே பவன் அருகே உள்ள பூங்காவில் தீக்குளித்துவிட்டு, நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி ஓடினார்.
பாக்பத்தில் மற்றொரு குடும்பத்துடன் அந்த நபரின் குடும்பத்தினருக்கு தகராறு இருந்துள்ளது. இதனால், இரண்டு குடும்பத்தினரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், மனமுடைந்த ஜிதேந்திரா, இன்று காலை ரயிலில் டெல்லி வந்து ரயில்வே பவன் ரவுண்டானாவுக்கு வந்து பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு பலத்த தீக்காயம் இருந்தது" என தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றம் அருகே நடந்தது என்ன?
ஜிதேந்திராவின் உடல்நிலை குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், "ஜிதேந்திராவின் உடலில் 95 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. அவர், ஐசியூவில் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கையில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரை டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது" என்றார்.
சம்பவம் தொடர்பான தகவல் பிற்பகல் 3.35 மணியளவில் கிடைத்ததாகவும், உடனே தீயணைப்பு வாகனம் அங்கு அனுப்பப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பல போலீசார் மற்றும் தடயவியல் புலனாய்வு குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் தீயிட்டு கொளுத்தி கொண்ட நபர் மீது கருப்பு போர்வை போர்த்தி சிலர் காப்பாற்ற முயற்சிப்பது பதிவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் தற்போது கூட்டத்தொடர் நடைபெறவில்லை. தொடர் அமளியை தொடர்ந்து கடந்த டிசம்பர் 20ஆம் தேதி நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.