உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், மற்றொரு ரவுடியை இன்று என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். டெல்லி - தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மிரட்டி அச்சுறுத்தி வந்துள்ளார் அனில் துஜானா.
உ.பி. காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை, இவரை, மீரட்டில் வைத்து சுட்டு கொலை செய்துள்ளது. இவருக்கு எதிராக 60 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஒரு வாரத்துக்கு முன்புதான், கொலை வழக்கில் ஜாமீன் பெற்ற துஜானா சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த உடனேயே, தன் மீது போடப்பட்ட கொலைவழக்கின் முக்கிய சாட்சி ஒருவரை துஜானா மிரட்டியதாகக் கூறப்படுகிறது. சாட்சியைக் கொல்ல துஜானா முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கையின் போது, துஜானா மற்றும் அவரது கும்பல் காவல்துறையினருடன் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இந்த சண்டையில், அவர் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
மீரட்டில் உள்ள ஒரு கிராமத்தில், உயரமான புதர்களால் சூழப்பட்ட சாலையில் இந்த என்கவுன்டர் நடந்துள்ளது. துஜானாவும் அவரது கும்பலும் அங்கு மறைந்திருந்ததாகவும், நெருங்கும் போது வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். காவல்துறையினரும் உடனடியாக திருப்பிச் சுட்டனர்.
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் என்கவுன்டர் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, பிரயாக்ராஜில் போலீஸ் காவலில் இருந்த பிரபல ரவுடிகள் அத்திக் அகமது, அஷ்ரப் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
கொலைக்கான பின்னணி:
கடந்த 2005 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ராஜூ பால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் வழக்கறிஞர் உமேஷ் பால். இவரை கடந்த 2007 ஆம் ஆண்டு கடத்தி கொலை செய்தனர். இதுதொடர்பான வழக்கில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், பிரபல ரவுடியுமான அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோருக்கு கடந்த மார்ச் 28 ஆம் தேதி பிரயாக்ராஜ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதனிடையே சில நாட்கள் முன்பு உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அத்திக் அகமதுவின் மகன்கள் ஆசாத் மற்றும் குலாம் ஆகியோர் ஜான்சியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு குற்றவாளிகளை பிடிக்க சென்ற போலீசாருக்கும், எதிர் தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆசாத் மற்றும் குலாம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
போலீசார் முன்பே சுட்டுக்கொலை:
இதனையடுத்து உமேஷ் பால் கொலை வழக்கில் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பொய்யாகச் சிக்க வைத்து, தாங்கள் உத்தரப்பிரதேச காவல்துறையால் போலி என்கவுன்டரில் கொல்லப்படலாம் என்று கூறி, பாதுகாப்பிற்காக உச்ச நீதிமன்றத்தில் அத்திக் அகமது வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இதனை விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
இப்படியான சூழலில் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக்ராஜ் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டிக் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் திடீரென கைத்துப்பாக்கியை எடுத்து இருவரையும் சரமாரியாக சுட்டனர். இதில் அத்திக், அஷ்ரப் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.