கடந்த சில நாட்களாக கங்கா நதியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்களின் உடல்கள் மிதந்து கொண்டிருந்தன. இது உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. அதன்பின்னர் உத்தரப்பிரதேசத்தில் இருவர் கங்கா நதியில் இறந்தவரின் உடலை வீசும்வீடியோ காட்சிகள் வெளியாகின. இது பலரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் உன்னாவ் பகுதியில் கங்கா நதிக்கரையின் அருகே உள்ள மணல்களில் அதிகளவில் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார். மேலும் இந்தவிவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார், "கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களை நிறையே பேர் எரிக்காமல் மணல்களில் புதைத்து வருகின்றனர். இந்த தகனம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் மாவட்ட அதிகாரிகளை அங்கு பார்வையிட அனுப்பியுள்ளேன். இந்த விவகாரத்தில் விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
உன்னாவ் பகுதியின் ஹாஜிபூர் என்ற இடத்தில் அமைந்துள்ள ரௌதாபூர் கங்கா கரை பகுதியில் இந்த உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தற்போது கொரோனா நோய் தொற்றால் பாதிப்பு அடைந்து இறந்தவர்கள தகனம் செய்ய அதிக செலவாகி வருகிறது. இந்த உடல் தகனத்திற்கு அங்கு 15ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால் தகனம் செய்ய பணம் இல்லாதவர்கள் இதுபோன்று மண்ணில் புதைத்து தகனம் செய்து வருகின்றனர் என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேசத்தின் காசியாபூர், பலியா உள்ளிட்ட மாவட்டங்களில் கங்கை நதியில் உடல்கள் மிதந்தன. அதேபோல் பீகார் மாநிலத்தின் பக்சர் பகுதியிலும் கங்கா நதியில் உடல்கள் மிதந்தன. இந்துக்களுக்கு கங்கா ஒரு புனிதமான நதி என்பதால் அங்கு உடல்கள் மிதந்தது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.