உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தயாராகும் முனைப்பில் தற்போது இருந்தே இறங்கியுள்ளது. இதற்காக அம்மாநில கிழக்கு பகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி களத்தில் உள்ளே இறங்கியுள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் அந்தக் கட்சி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது. அத்துடன் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


எனினும் அங்கு தற்போது யோகி ஆதித்யநாத் மீது கட்சியில் உள்ள சில தலைவர்களுக்கு அதிருப்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை பாஜக மறுத்து வருகிறது. இந்தச் சூழலில் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி களத்தில் குதித்துள்ளது. இதுகுறித்து பிரியங்கா காந்தி, “உத்தரப்பிரதேசத்தில் கட்சி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதை சரிய செய்யவேண்டும். நான் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இங்கு இருப்பேன். கட்சியில் கடந்த காலங்களில் விலகிய பழைய எம்பி எம்.எல்.ஏக்கள் யார் வேண்டுமானாலும் மீண்டும் கட்சியில் இணையலாம். 




அவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்றி தேர்தலில் போட்டியிட விரும்பினால் தலைமை அது குறித்து பரிசீலனை செய்யும். மேலும் அவர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியில் தற்போது இருந்தே களப் பணியில் ஈடுபடவேண்டும். அத்துடன் ஒவ்வொரு கிராமங்களிலும் 5 அல்லது 6 பேருக்கு மேல் இறங்கி களப்பணி செய்யும் திட்டமும் வகுத்துள்ளேன்” என கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா காந்தியின் வருகை அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் முதலில் கட்சியை பலப்படுத்தும் வேலையில் இறங்க உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதன்பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 




கடந்த 201-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணி பெரிய அளவில் தோல்வியை தழுவியது. மேலும் இவர்களின் கூட்டணி தான் பாஜக அதிக இடங்களை வெல்ல ஒரு காரணமாக அமைந்தது என்றும் அரசியல் விமர்கர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். ஆகவே இம்முறை கூட்டணி விஷயத்தில் காங்கிரஸ் நன்கு யோசித்து முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக, சமாஜ்வாதி  தவிர மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரப்பிரதேச அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே 2022 சட்டப்பேரவை தேர்தல் மிகவும் சவாலான ஒன்றாக அமையும் என்று கருதப்படுகிறது. 


மேலும் படிக்க: இன்று கூகுள், டூடுல் போட்டுக் கொண்டாடும் கடம்பினி கங்குலி யார் தெரியுமா?