வருமான வரி தாக்கலுக்கு வருகிற ஜூலை 31 ஆம் தேதியே கடைசி நாள் என்றும் இதனை நீடிக்க எந்த திட்டமும் இல்லை என்றும் மத்திய வருவாய் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.


மத்திய வருவாய் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், “ 2022 – 2023 ஆம் ஆண்டு வருமான வரி தாக்கல் கடைசி நாளான ஜூலை 31 ஆம் தேதி சுமார் 5.83 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருந்தனர். இந்த ஆண்டு அதிகமானோர் தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்காக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியிருந்தார்.


மேலும், “ வருமான வரியை தாக்கல் செய்ய கடைசி வரை காத்திருக்க வேண்டாம். விரைந்து தாக்கல் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. காலக்கெடு நீடிக்கப்படும் என நம்ப வேண்டாம். அதற்கான எந்த திட்டமும் அரசிடம் தற்போது வரை இல்லை” என குறிப்பிட்டிருந்தார்.


ஜூலை 12 ஆம் தேதி வரை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர், ஜூலை 12, 2022 ஆம் ஆண்டு 11.8 மில்லியன் நபர்கள் வரி தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சுமார் 22 மில்லியன் ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள என்றும்  இதனால் காலக்கெடுவை நீடிக்க வேண்டிய சூழல் எதுவுமில்லை என்றும் தெரிவித்துள்ளார். வரி திரட்டல் இலக்கைப் பொறுத்தவரை, வளர்ச்சி விகிதமான 10.5 சதவீதத்துக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்  என சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.


2023 -  2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டின் அடிப்படையில், நடப்பாண்டில் வரி வருவாய் சுமார் ரூபாய் 33.61 லட்சம் கோடியாக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரு நிறுவனம் மற்றும் தனி நபர் வருமான வரியை விட, 10.5 சதவீதம் அதிக வரியை திரட்ட அரசு திட்டமிட்டுள்ளதாகவும், சுங்க வரி வசூலில் 11 சதவீதம் அதிகரித்து 2.33 கோடி உயரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவை தாண்டி வருமான வரி தாக்கல் செய்யப்பட்டால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.