மணிப்பூரில் தொடரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. வன்முறை சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், முடிவின் வன்முறை சம்பவங்கள் தொடர்வது பல்வேறு விதமான கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது.
அமைச்சர் வீட்டிற்கு தீ வைப்பு
தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வரும் கலவரத்தால் அங்கு 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. இந்நிலையில், மணிப்பூர் இம்பாலில் நேற்றிரவு 1,000 க்கும் மேற்பட்ட கும்பலால் மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. சம்பவம் நடந்த போது மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இம்பாலில் ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கும்பல் இம்பாலில் உள்ள அமைச்சரின் வீட்டை தீ வைத்து எரித்துள்ளனர். சம்பவத்தின் போது அமைச்சரின் வீட்டில் ஒன்பது பாதுகாப்புப் படையினர், ஐந்து பாதுகாவலர்கள் மற்றும் எட்டு கூடுதல் காவலர்கள் பணியில் இருந்தனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம் மணிப்பூர் பெண் அமைச்சர் Nemcha Kipgen என்பவரது வீடும் வன்முறையாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. மெய்டீஸ் இனக்குழுவினரே இந்த வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு அமைச்சர் வீட்டிற்கு தீ வைத்து எரிக்கப்பட்டது பதற்றத்தை கிளப்பியுள்ளது.
என்ன காரணம்?
மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர். இந்த சூழலில், இரு பிரிவினரிடையே வெடித்துள்ள வன்முறை மணிப்பூரை கொந்தளிக்க வைத்துள்ளது.
சமீபத்தில் கூட, குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுமி, அவரது தாய் மற்றும் அவரது உறவினர் ஆகிய 3 பேரும் ஃபாயெங்கில் இருந்து இம்பால் மேற்கு நோக்கி ஆம்புலன்ஸில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கும்பல் ஒன்று அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது. அவர்கள் யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்ஸ்க்கு தீ வைத்துள்ளது. இதில் ஆம்புலன்ஸில் இருந்த மூன்று பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தற்போது, மணிப்பூரின் 16 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளன. வன்முறையைத் தூண்டும் வதந்திகளைத் தடுக்க மாநிலம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.