சமக்ர சிக்‌ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) என்று அழைக்கப்படும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.


இதன்படி பள்ளி கட்டமைப்பு வசதிகள், கல்வி, ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட பள்ளிகளுக்குத் தேவையான நிதியை ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இதற்கான செலவீனங்களை மதிப்பீடு செய்து, மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுப்பும்.


பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேராத தமிழ்நாடு: அதில் திட்டங்களின் அடிப்படையில், முழு தொகையோ, இல்லை குறைத்தோ மத்திய அரசு நிதி வழங்கும். சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின்படி, 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 40 சதவீத நிதிக்கு மாநில அரசே பொறுப்பு.


இதற்கிடையே, 2024- 25ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டுக்கான நிதியாக ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கான 60 சதவீதத் தொகை ரூ.2,152 கோடி 4 தவணைகளில் ஒதுக்கீடு செய்யப்படும்.


முதல் தவணையாக ரூ.573 கோடி நிதி, ஜூன் மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் ஆகஸ்ட் மாதமே முடிய உள்ள நிலையில், நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்துத் தமிழக அரசு பல்வேறு நினைவுறுத்தல் கடிதங்களை அளித்தும், மத்திய அரசு இதுவரை கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.


தமிழக முதல்வருக்கு டெல்லியில் இருந்து வந்த கடிதம்: பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையும் மாநிலங்களுக்கு மட்டுமே சமக்ர சிக்‌ஷா அபியான் திட்ட நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது.


தமிழ்நாட்டில் ஏற்கெனவே உள்ள 10+2 பாடத்திட்ட முறைக்கு பதிலாக 5+3+3+4 முறை, 6ஆம் வகுப்பில் இருந்து தொழிற்கல்வி, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கை அம்சங்கள் இதன் முக்கியக் கூறுகள் ஆகும்.


எனினும் புதிய கல்விக் கொள்கை அம்சங்களைத் தவிர்த்து பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு ஒப்புதல் அளித்து கடிதம் அனுப்பி இருந்தது. எனினும் இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. நிபந்தனைகள் இன்றி பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் மட்டுமே, நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில், "குழந்தைகளின் கல்வி, எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடாக இருக்கக் கூடாது. தமிழ்நாட்டின் பல லட்சம் மாணவர்கள், இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள்.


தாய் மொழியுடன் பன்மொழி கற்றலை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.