Stalin Vs Ashwini Vaishnaw: கிடப்பில் கிடக்கும் ரயில்வே திட்டங்கள்; தமிழக அரசே காரணம்; மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு
தமிழ்நாடு அரசால் தான் ரயில்வே திட்டங்கள் கிடப்பில் உள்ளதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கான திட்டங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

மத்திய அரசு தமிழ்நாடு மீது பழி சுமத்தாமல், நிதியை வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்ட பதிவிற்கு பதிலளிக்கும விதமாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக கூறியுள்ளார். மேலும், 2014 முதல் மாநிலத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்து, 2026–27-ம் ஆண்டில், 7,611 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக கூறியுள்ளார்.
1. The Government of India remains fully committed to Tamil Nadu’s development.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 9, 2026
Budget allocation to the State has increased more than 8.5 times since 2014, reaching ₹7,611 crore in 2026–27. https://t.co/DUhiI7CKW2 pic.twitter.com/H8RRbQzAhj
இதனுடன், பல்வேறு பதிவுகளின் மூலம், தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் குறித்த விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாடு
* தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக இந்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. 2014 முதல் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு வழங்கப்படும் பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்கிற்கு மேல் அதிகரித்து, 2026–27 ஆம் ஆண்டில் ரூ. 7,611 கோடியாக உயர்ந்துள்ளது.
* ரயில்வே உட்கட்டமைப்பு விரைவாக உருவாக மாநில அரசின் ஒத்துழைப்பு அவசியம். செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலத்தில், 24% மட்டுமே இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளது, அதாவது 4,326 ஹெக்டேரில் 1,052 ஹெக்டேர் மட்டும். நிலம் கையகப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கு ரூ. 1,465 கோடி ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது.
* பல முக்கியமான ரயில்வே திட்டங்கள் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாலேயே பின்னடைவை சந்தித்து வருகின்றன. நிதி பற்றாக்குறையால் திட்டங்கள் தடைபடவில்லை; இதற்கு மாறான எந்தக் குற்றச்சாட்டும் ஆதாரமற்றது.
* நிலம் கையகப்படுத்துதலே முக்கிய தடையாக உள்ளது. மதுரை–தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழியாக) புதிய பாதை திட்டத்திற்கு 91% நிலம் இன்னும் நிலுவையில் உள்ளது; திண்டிவனம்–செஞ்சி–திருவண்ணாமலை புதிய பாதை திட்டத்திற்கு 86% நிலம் நிலுவையில் உள்ளது.
* இராமேஸ்வரம்–தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்திற்கு 2019 ஆம் ஆண்டு மாண்புமிகு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், இந்தத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் இதுவரை தொடங்கப்படவில்லை.
* இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் பல புதிய ரயில் பாதைகள், இரட்டைப் பாதைகள், மூன்றாம் மற்றும் நான்காம் பாதை திட்டங்கள் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஆதரிக்க கூடுதல் திறன் விரிவாக்கத்திற்கான விரிவான திட்ட அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
* தமிழ்நாட்டில் மொத்தம் 77 அமிர்த் ரயில் நிலையங்கள் முழுமையான மறுசீரமைப்பிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன; இதில் 18 ரயில் நிலையங்களில் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. 2014 முதல் மாநிலத்தில் சுமார் 1,350 கி.மீ. புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* தமிழ்நாட்டில் ரயில்வே 97% மின்மயமாக்கலை அடைந்துள்ளது. 2014 முதல் 2,386 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது.
* ‘மேக் இன் இந்தியா’ நவீன ரயில்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் மலிவான பயணத்தை வழங்குகின்றன. தற்போது மாநிலத்தில் 9 இணை(pair) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 9 இணை அமிர்த் பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் இயக்கப்படுகின்றன.
* தமிழ்நாட்டில் ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டை வேகப்படுத்த மத்திய அரசு தயாராகவும் உறுதியாகவும் உள்ளது. இந்த திட்டங்களை மக்களிடம் விரைவாக ஒன்று சேர்க்க மாநில அரசின் நேர்மையான ஆதரவும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.
இவ்வாறு, அஸ்வினி வைஷ்ணவ் தனது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.























