உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம்.
ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.
ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சமீபத்தில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நீதிபதிகள் நியமன விவகாரத்தில் முடிவுகளை எடுக்கும் கொலீஜியம் அமைப்பில் அரசின் சார்பில் பிரதிநிதிகளை இடம்பெற செய்ய வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் மூலம், கொலீஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கோருவது கொண்டு வரப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ரிஜிஜு, "தலைமை நீதிபதிக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட கடிதங்களின் தொடர்ச்சியாகவே இது எழுதப்பட்டுள்ளது. தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை கலைக்கும்போதே மறுசீரமைக்கப்பட்ட ஆணையம் குறித்து உச்ச நீதிமன்றம் பேசியிருந்தது" என்றார்.
இதனை அபாயகரமானது என குறிப்பிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "இது மிகவும் ஆபத்தானது. நீதிபதிகள் நியமனங்களில் அரசின் தலையீடு முற்றிலுமாக இருக்கக் கூடாது"
ட்விட்டரில் இதற்கு பதிலடி அளித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர், "நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை நீங்கள் மதிக்கிறீர்கள் என்று நம்புகிறேன்!
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை ரத்து செய்யும் போது, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் வழிகாட்டுதலின் சரியான தொடர் நடவடிக்கை இதுவாகும். கொலிஜியம் அமைப்பின் செயல்முறையை மறுசீரமைக்க உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வே உத்தரவிட்டது" என்றார்.
மூத்த அமைச்சர்கள், முன்னாள், இன்னாள் குடியரசு துணை தலைவர்கள் உள்ளிட்டோர், கொலீஜியம் அமைப்பின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். கடந்த 1993ஆம் ஆண்டு முதல் கொலீஜியம் அமைப்பு செயல்பாட்டில் உள்ளது. அப்போதில் இருந்து இப்போது வரை, கொலீஜியம் அமைப்புக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தொடர் கருத்துகளை தெரிவித்து வருகிறது.