ஜனவரி 1 ஆம் தேதி முதல், 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பு மருந்து  தொடங்க உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

  


15 - 18 வயதுடைய பயனாளிகள்:   


15 - 18 வயதுடைய குழந்தைகளுக்கு 2022 ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும். 15 வயது நிறைவடைந்தோர் அல்லது 2007ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.   


பொதுவாக, அனைத்து பயனாளிகளும் ஆன்லைனில் பதிவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள் மற்றும் எவ்வித அசவுகரியமும் ஏற்படாமல் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முன்கூட்டியே தடுப்பூசிக்கு சரியாகத் திட்டமிடலாம்.


இருப்பினும், அருகில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு நேரடியாகச் சென்றும் (walks-in) தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.   


15 - 18 வயதுடைய பயனாளிகளுக்கு  கோவாக்சின் தடுப்பு மருந்து மட்டுமே செலுத்தப்படும்.        


ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்கள் பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு முன்னதாக அறிவித்தது.


முன்களப் பணியாளர்கள்:


2022 ஜனவரி 10ஆம் தேதி முதல், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்படும்; 


மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், 60 வயதுக்கு மேற்பட்ட, இணைநோயுடன் கூடிய முதியவர்களுக்கும் ஜனவரி 10ஆம் தேதி முதல் செலுத்தப்படும்;


இரண்டாம் தடுப்பூசி செலுத்தி 39 வாரங்கள் (9 மாதங்கள்) முடிவடைந்த  பயனாளிகள் (சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர்) தற்போது முன்னெச்சரிக்கை தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்.  (நீங்கள் இரண்டாவது தவணையை எந்த தேதியில் போட்டுக்கொண்டீர்களோ அதில் இருந்து 9 மாதங்கள்)


36 வார இடைவெளியை கடந்த அனைத்து பயனாளிகளுக்கும் கோ-வின் தளத்தில் இருந்து குறுந்தகவல் அனுப்பப்படும்.