நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், பாஜக உறுப்பினர்கள் இந்தி மொழியை வேண்டுமென்றே திணிப்பதாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாடியுள்ளனர்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம், மற்றும் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்து வருகின்றனர்.
நீட் தேர்வு விலக்கு மசோதா, ஆளுநர் அதிகார வரைமுறை, அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் திருத்தம், மாநிலங்களுக்கு கூடுதல் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தமிழக உறுப்பினர்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு, இந்தி மொழியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் பதிலளித்தார். அப்போது, மொழி பெயர்ப்பு முறையில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது எனத் தெரிவித்தார்.
இதற்கு, எதிர்ப்புத் தெரிவித்த கணேசமூர்த்தி, "இந்தி பேசாத மாநிலங்களில் இருந்த வந்த உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ள வேண்டும். தமிழ் மொழியில் தான் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆங்கிலம் நன்றாக பேசக்கூடியவர்கள் நீங்கள்!.. அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான மதிப்பு கொடுங்கள். எந்த மொழியையும் திணிக்க கூடாது" என்று தெரிவித்தார்.
இதற்கு விரைந்து எதிர்வினையாற்றிய அமைச்சர் பியுஷ் கோயல், " எனக்கு விருப்பமான மொழியில் நான் பேசுகிறேன். நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பு வசதியுள்ளது. நீங்கள், உங்கள் ஹெட்போனில் தமிழ் மொழியில் பதில்களைப் பெறலாம் என்று காட்டமாகத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளில் பேசும் பாராளுமன்ற உறுப்பினர், ஆங்கிலம், இந்தி மற்றும் எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் பேசலாம். இந்தி, ஆங்கிலம் அல்லாது எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியில் பேச விரும்புவோர், அரை மணி நேரம் முன்கூட்டியே பேச விரும்பும் மொழியைக் குறிப்பிட வேண்டும். உறுப்பினர் பேசுவதை மொழிபெயர்ப்பாளர்கள் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறுவர்.
இருப்பினும், முந்தைய காலங்களில் ஆங்கிலம் நன்றாக பேசக்கூடிய உறுப்பினர்கள், இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து வரும் உறுப்பினர்களின் கேள்விக்கு ஆங்கிலத்தில் பதிலளித்து வந்தனர். குறைந்தபட்சம், ஆங்கிலத்தில் பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பரிசீலக்க முன்வந்தனர். ஆனால், தற்போதைய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பாஜக அமைச்சர்கள் இந்தியை தங்களது விருப்ப மொழியாக உயர்த்திப்பிடிக்கும் போக்கும் காணப்படுவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி ஆன்மீகச் சுற்றுலா தளமாக விளங்குகிறது. குறைந்த கட்டணத்தில் பிராந்திய இணைப்பு சேவை வழங்கும் 'உதான்' திட்டத்தை பழனிக்கு நீட்டிக்கபடுமா என்று திமுக பாராளுமன்ற உறுப்பினர் ப. வேலுசாமி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, சிவில் விமானத்துறை அமைச்சர் ஜோதித்திய சிந்தியா இந்தியில் பதிலளித்தார். இதற்கு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் இதுகுறித்து பேசுகையில், "கேள்வி ஆங்கிலத்தில் தான் கேட்கப்பட்டது. ஆங்கிலத்தில் சரளமாக பேசியக் கூடிய அமைச்சர் அந்த மொழியிலே பதில் அளிக்கலாம். இந்தியில் பேசுவது தமிழ்நாடு உறுப்பினர்களை அவமதிக்கும் செயல்” என்று கூறினார்.
மத்திய அமைச்சர்களின் இந்த போக்கை கடுமையாக சாடிய கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, "அமைச்சர் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை. ஆனால், கோயல் ஆங்கிலத்தில் சரளமாக பேசக் கூடியவர். இதே, அவையில் மற்ற உறுப்பினர்களுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்து வருகிறார். தமிழகத்தின் மீது இத்தகைய திமிர்த்தனமான போக்கை இந்த அரசு கொண்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
ஜனவரி 31 அன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடர், ஏப்ரல் 8ம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இடைவெளிக்காக 2022, பிப்ரவரி 11ம் தேதி ஒத்திவைக்கப்படும். அதன்பின் மார்ச் 14ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் தொடரும். இந்த கூட்டத் தொடர் 2022 ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடையும்.