தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இந்த முறையாவது தமிழ்நாட்டுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எல்லோருமே எதிர்பார்த்தனர். அதேபோல இந்தியர்கள் அனைவருமே பொதுவாக சில அறிவிப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். எனினும் எந்த எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் எந்தெந்தத் திட்டங்கள் பொதுவாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு, நிறைவேற்றப்படவில்லை? இதோ காணலாம்.
- தங்கம், வெள்ளிக்கான விலை உலக அளவில் கடும் ஏற்றத்தைச் சந்திக்கும் நிலையில், அவற்றுக்கான இறக்குமதி வரி இந்திய அளவில் குறைக்கப்படும் அல்லது தங்கத்துக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் 3 சதவீதத்தில் இருந்து குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
- அதேபோல தனிநபர் வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டு, அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த முறை விகிதமே இம்முறையும் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
- தமிழ்நாட்டுக்கான மெட்ரோ திட்டங்கள், குறிப்பாக கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. சென்னை- பெங்களூரு, சென்னை- ஹைதராபாத் இடையேயான அதிவேக ரயில் சேவை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரியல் எஸ்டேட் திட்டங்களில் வீடுகளை வாங்க வரிக் குறைப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
- தமிழ்நாட்டில் விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி விடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் பூர்த்தி செய்யப்படவில்லை.
- தமிழ்நாடு செயல்படுத்தி வரும் ஜல் ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி இந்த முறை விடுவிக்கப்படவில்லை.
- தொழில்நுட்ப உலகில், சைபர் பாதுகாப்புக்கான தேவையும் அவசியமும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
- மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பெருக்கவும் உற்பத்தி செய்யவும் சூழலியல் ஆர்வலர்கள் கோரி வரும் நிலையில், அதற்கான அறிவிப்பும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளியிடப்படவில்லை.
