வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், திகார் சிறையில் இருந்து இன்று (டிச.23) காலை வெளிவந்தார்.


2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ஷாகீன் - பாக் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெகுஜன போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 23, 2020 அன்று, பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கபில் மிசுரா, சாகீன்பாக்கில் போராட்டக்காரர்களை வெளியேற்றுமாறு டெல்லி காவல்துறையிடம் கேட்டுக் கொண்டார்.


மேலும், போராட்டக்கார்களுக்கு கெடு விடுத்தார். இதனையடுத்து, ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 2020 செப்டம்பர் 13ஆம் தேதி முன்னாள் ஜே.என்.யு மாணவர் உமர் காலித்தை காவல் துறையினர் கைது செய்தனர்.




வடகிழக்கு டெல்லி பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போராட்டங்கள், கலவரங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக உமர் காலித் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


கடந்த செப்பெம்பர் 13ஆம் தேதியுடன் உமர் காலித் சிறையில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் உமர் காலித்தின் மனு மட்டும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது.


வடகிழக்கு டெல்லி பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போராட்டங்கள், கலவரங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக உமர் காலித் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் உமர் காலித்துக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், முன்னதாக தன் சகோதரியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக உமர் காலித் ஜாமீன் கோரியிருந்தார். 





அவரது மனுவை ஏற்று தற்போது ஏழு நாள்களுக்கு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கினார். இந்த இடைக்கால ஜாமீன் டிசம்பர் 23 முதல் 30 வரை அமலில் இருக்கும் .