போர் காரணமாக உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படும், இறுதி வாய்ப்பு தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
உக்ரைன் மருத்துவ மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு:
போர் காரணமாக உக்ரைனில் இருந்து இந்திய மருத்துவ மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர், தங்களது படிப்பை பூர்த்தி செய்யாமலேயே தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா போரால் பாதிக்கப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை பூர்த்தி செய்ய, வழங்கக்கூடிய ஒரே ஒரு இறுதி வாய்ப்பு குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
ஒரே ஒரு வாய்ப்பு:
அதன்படி, ”உக்ரைன் மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ பட்டப்படிப்பு பகுதி 1 மற்றும் பகுதி 2-ஐ பூர்த்தி செய்ய, எந்தவொரு மருத்துவ கல்லூரியிலும் பதிவு செய்யாமல் ஒரே ஒரு வாய்ப்பு வழங்கப்படும். எழுத்துத் தேர்வானது இந்திய மருத்துவ கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும், செய்முறை தேர்வு சில குறிப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும். தேர்வுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கட்டாய சேவை பயிற்சியில் ஈடுபட வேண்டும். உக்ரைன் போரால் மருத்துவ படிப்பை பூர்த்தி செய்யாமல் அங்கிருந்து தாயகம் திரும்பிய இந்திய மாணவர்களுக்காக, மத்திய அரசால் ஒரே ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும்” எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர்
ரஷ்யா முன்னெடுத்தபடையெடுப்பு காரணமாக, உக்ரைன் நாட்டில் இருந்து ஆயிரகணக்கான இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். இருநாடுகளுக்கு இடையேயான போர் ஓராண்டை கடந்தும் தீவிரமாக வருகிறது. இதனால் உக்ரைனில் மருத்துவம் பயின்று பந்த இந்திய மாணவர்கள் பலரும் தற்போது, ரஷ்யா, செர்பியா, உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். அதேநேரம், மீண்டும் உக்ரைன் நாட்டுக்கு திரும்ப வழியில்லாத காரணத்தினால், இந்தியாவில் தங்கள் மருத்துவப் படிப்புகளில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று உக்ரைன் மாணவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
”இந்திய மருத்து கல்லூரிகளில் அனுமதி இல்லை”
இந்த வழக்கில் கடந்தாண்டு பதிலளித்த மத்திய அரசு " உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை இந்திய மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க முடியாது. தேசிய மருத்துவ ஆணையச் சட்டப்படி இதற்கு அனுமதி இல்லை. நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறாத, உயர்கல்விக்கான அணுகல் உள்ள மாணவர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்கின்றனர். குறைவான தகுதி கொண்ட மாணவர்களை நாட்டின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க அனுமதிப்பது பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பல்வேறு தரப்பினரும் இதுபோன்ற வாய்ப்பைக் கேட்டு நீதிமன்றத்தை அணுகலாம். விதிமுறையில் தளர்வு கொண்டு வருவது நாட்டின் மருத்துவக் கல்வியின் தரத்தை பாதிக்கும்” என தெரிவித்தது. இந்நிலையில் ஒரே ஒரு வாய்ப்பாக, இந்திய மருத்துவ பாடத்திட்டத்தின் கீழ், மருத்துவ படிப்பை பூர்த்தி செய்ய, உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.