இரு பிரிவினருக்கிடையே கிட்டத்தட்ட பிரச்சினை உண்டாகி இருக்கக் கூடிய சூழலில், ராஜஸ்தானில் சமீபத்தில் கொல்லப்பட்ட தையல்காரர் கன்னையா லாலின் வீட்டுக்கு அருகே நடைபெற்ற முஹர்ரம் பேரணியில் தீ விபத்து ஏற்படவிடாமல் இந்துக்கள் காப்பாற்றியுள்ளனர்.


 






தையல் தொழிலாளியான கன்னையா லால், ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு பேரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், மத கலவரம் ஏற்படும் நிலைக்கு சென்றது.


இச்சூழலில், ​​செவ்வாய்கிழமை மாலை, மொச்சிவாடா தெருவில் குறுகிய பாதையில் முஹர்ரம் ஊர்வலம் சென்றபோது, 25 அடி உயரமுள்ள கொடியின் உச்சியில் தீப்பிடித்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற முஸ்லீம்கள் தீயை உடனடியாக கவனிக்கத் தவறிவிட்டனர். ஆனால், இரண்டாவது, மூன்றாவது மாடிகளில் வசிக்கும் மக்கள் இதை கவனித்துவிட்டனர்.


தீ பரவியதைக் கண்ட அப்பகுதி மக்கள், நேரத்தை வீணாக்காமல், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரை எடுத்து ஊற்றினர். ஆஷிஷ் சோவாடியா, ராஜ்குமார் சோலங்கி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பால்கனியில் இருந்து தீயை அணைக்கும் வரை கட்டிடத்தின் மீது தண்ணீரை ஊற்றிக்கொண்டே இருந்தனர்.


அசம்பாவிதம் எதுவும் நடைபெற விடாமல் தடுக்கப்பட்டது மட்டுமல்லாமல், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இச்சம்பவம் அமைந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தாரா சந்த் மீனா கூறுகையில், "இந்த சம்பவம் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது" என்றார்.


சம்பவம் நடைபெற்றபோது அங்கிருந்த துணை காவல் கண்காணிப்பாளர் சிப்ரா ராஜாவத், "ஷார்ட் சர்க்யூட் அல்லது தூபக் குச்சிகளில் இருந்து தீப்பொறிகள் ஏற்பட்டிருக்கலாம். இந்துக்கள் தீயை அணைத்த பிறகு, முஸ்லீம்கள் கைதட்டி நன்றி தெரிவித்தனர். ஜூன் 28 அன்று கன்ஹையா லால் படுகொலை செய்யப்பட்ட மால் தாஸ் தெருவுக்கு அருகில் மோச்சிவாடா தெரு உள்ளது" என்றார்.


ரியாஸ் அக்தாரி மற்றும் கவுஸ் முகமது ஆகிய இருவரால் கன்னையா லால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் நடவடிக்கையை துரிதப்படுத்தினர். மேலும், அவர்கள் வெளியிட்ட வீடியோவால் போலீசார் அவர்களை அடையாளம் கண்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண