கர்நாடகா - கேரள எல்லையில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் செல்ஃபி எடுக்க காரில் இருந்து இறங்கிய இருவரை காட்டு யானை துரத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவத்தில் யானையின் தாக்குதலில் இருந்து ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியது தெரிய வந்துள்ளது.






கேரள மாநிலம் தலப்புழா பகுதியை சேர்ந்த சிலர் ஒரு காரில் குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர். தொடர்ந்து அவர்கள் முதுமலை வழியாக பந்திப்பூர் புலிகள் காப்பகதிற்கு சென்றுவிட்டு கேரளா திரும்பினர்.


துரத்திய காட்டு யானை:


அப்போது முத்தங்கா சரணாலய சாலையை கடந்து சென்ற போது 3 காட்டு யானைகள் அப்பகுதியில் நின்று கொண்டு இருந்தது. இதனை கண்டதும் சுற்றுலா பயணிகள் காரை நிறுத்தி கீழே இறங்கி சென்று ஆபத்தை உணராமல் காட்டுயானைகளை புகைப்படம், வீடியோ எடுக்க முயன்றனர். அப்போது அதில் ஒரு யானை அவர்களை நோக்கி துரத்த தொடங்கியது.


கண் இமைக்கும் நொடியில் யானை துரத்த ஆரம்பித்ததும் கிழே இருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அந்த காட்டு யானை விடாமல் துரத்தியது. அப்போது இருவரில் ஒருவர் ஓடும் போது தவறி கிழே விழுந்தார். அவர் யானையின் பிடியில் சிக்கிவிடுவார் என அந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் எண்ணம் தோன்றியிருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக நேர் எதிரே வேறு ஒரு வாகனம் வந்ததால் அந்த யானையின் கவனம் திசை திரும்பியது. இதனால் கீழே விழுந்த நபரை அந்த யானை லேசாக பின்னங்காலால் எட்டி உதைத்துவிட்டு எதிரே வந்த வாகனத்தை நோக்கி சென்றது.


இதற்கிடையே கீழே விழுந்த நபர் உருண்டவாறு மரத்தடியை நோக்கி சென்றார். தொடர்ந்து 2 பேரும் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்று உயிர் தப்பினர். இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற சிலர் புகைப்படம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இது தற்போது வைரலாகி உள்ளது.  


பந்திப்பூர் வனப்பகுதியில் யானைகள் ஆக்ரோஷமாக நடந்து கொண்டு சுற்றுலா பயணிகளை துரத்துவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, சஃபாரிக்கு சென்ற சுற்றுலா பயணிகளை யானை துரத்திய வீடியோ வெளியானது. ஓட்டுநரின் திறமையால், சுற்றுலாப் பயணிகள் தாக்குதலில் இருந்து தப்பித்தனர். கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக மனித - விலங்கு மோதல் கணிசமாக அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்களைச் சமாளிக்க மாநில அரசு சிறப்புப் படைகளை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.