வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் நடந்த வகுப்புவாத வன்முறை தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளர்கள் இருவர் மீதான வழக்குகளை கைவிடுமாறு இந்திய ஊடக சங்கம் (பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா) வலியுறுத்தியுள்ளது.


முன்னதாக டெல்லியைச் சேர்ந்த சம்ரிதி சகுணியா, ஸ்வர்ணா ஜா ஆகிய இருவரும் திரிபுராவுக்கு செய்தி சேகரிக்கச் சென்றனர். ஆனால் அவர்கள் திரிபுரா போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.


அவர்கள், இருவரும் இருவேறு சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதாக, உண்மைக்கு மாறான சம்பவங்களைத் திரித்துக் கூறியதாகவும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சமூக ஊடகங்களில் அவர்கள் வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டதாக போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.


இரண்டு பத்திரிகையாளர்களும் முதலில் திரிபுரா காவல்துறையினரால் மாநிலத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர், ஆனால் பின்னர் அசாமில் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்கள் மீண்டும் திரிபுராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். சகுனியா மற்றும் ஜா ஆகியோர் திரிபுராவின் உதய்பூர் உட்பிரிவு கோமதி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். பின்னர் நேற்று திங்கள் கிழமை காலையில் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.


இருவருமே டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட HW ஊடகத்தைச் சேர்ந்தவர்கள்.


இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டி இந்திய ஊடக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "திரிபுராவில் பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்படுவது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே, ஷ்யாம் மீரா சிங் என்ற பத்திரிகையாளர் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA) கீழ் கைது செய்யப்பட்டார்.


ஒரு நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்றால் அங்கே ஊடக சுதந்திரம் இருக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். திரிபுரா போலீஸார் இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். பெண் பத்திரிகையாளர்கள் சம்ரிதி சகுணியா, ஸ்வர்ணா ஜா ஆகிய இருவரின் மீதான வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. 


இதற்கிடையில் திரிபுராவில் செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பிப்லப் தேவ் முதல்வராக இருக்கிறார்.


பெண் பத்திரிகையாளர்கள் கைதுக்கு கண்டனம் எழுந்த நிலையில் அம்மாநில அமைச்சர் சுஷாந்த் சவுத்ரியோ, அந்தப் பெண்கள் இருவரும் பத்திரிகையாளர் என்ற பெயரில் மாநில அரசின் மாண்பைக் குறைக்கும் வகையில் எதிர்க்கட்சியின் கைக்கூலிகள் போல் செயல்பட்டுள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.