இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.
இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், கேரளாவின் மலபார் பகுதி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெங்களூருவில் இருந்து கன்னூர் வரையில் இயங்கி வந்த விரைவு ரயிலானது கோழிக்கோடு வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வண்டி எண் 16511 கே.எஸ்.ஆர். பெங்களூரு ரயில் நிலையத்தில் இரவு 9.35 புறப்படும் விரைவு ரயில் மறுநாள் பகல் 12.40 மணிக்கு கோழிக்கோடு ரயில் நிலையத்தை சென்று சேர்கிறது. மறுமார்க்கத்தில், (வண்டி எண் 16512) கோழிக்கோடு ரயில் நிலையத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மறுநாள் காலை 6.35 மணிக்கு கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தை சென்று சேர்கிறது.
முன்னதாக கன்னூர் வரை இயங்கி வந்த இந்த ரயிலானது தளசேரி, வடகரா, கொயிலண்டி ரயில் நிலையங்களின் வழியாக இனி கோழிக்கோடு வரை சேவை தரவுள்ளது. கேரளாவின் மலபார் பிராந்தியத்தில் இருந்து பெங்களூகருவில் ஆயிரக்கணக்கானோர் கல்வி, வேலை நிமித்தமாக வசித்து வருகின்றனர். இந்த ரயில் சேவை நீடிப்பானது அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. மேலும் படிக்க இந்த ரயில் சேவையானது இரு மார்க்கங்களிலும் வாரத்தின் 7 நாள்களும் சேவை வழங்கி வருகிறது.
