டிசம்பர் 26ஆம் தேதி முதல் ரயில் பயணத்துக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்திய நாட்டைப் பொறுத்தவரை ரயில் போக்குவரத்து என்பது தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் போக்குவரத்து முறைமைகளில் மிக முக்கியமான ஒன்றாகும். குறைந்த கட்டணம், பாதுகாப்பு, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ரயில்வே போக்குவரத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய ரயில்வேயில் முக்கிய மாற்றம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இதன்படி இன்னும் 5 நாட்களில் ரயில்வே கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
யார் யாருக்கு எவ்வளவு?
சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ. தூரத்துக்கு அதிகமான பயணத்துக்கு, கிலோ மீட்டர் தொலைவுக்கு 1 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல, மெயில், விரைவு ரயில்களில் 215 கிலோ மீட்டருக்கு அதிகமான தூரம் ஏசி வசதி அல்லாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட உள்ளது.
அதே நேரத்தில் அனைத்து ரயில்களிலும் ஏசி வகுப்புகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, கிலோ மீட்டருக்கு 2 பைசா என்ற அளவில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. ஏசி வசதி அல்லாத பெட்டிகளில் 500 கி.மீ. பயணம் செய்ய ரூ.10 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
யாருக்கெல்லாம் கட்டண உயர்வு இல்லை?
சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ. வரையிலான பயணத்துக்கான கட்டணத்தில் கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
என்ன காரணம்?
ரயில்வே ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம், பிற செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் இந்தக் கட்டணம் மிகவும் குறைந்த அளவே எனவும் இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இந்த கட்டண உயர்வு மூலம் ரூ.600 கோடி வருவாய் இந்திய ரயில்வேக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.