கேரளாவில் ஓடும் ரயிலில் படுக்கை விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது. 


பொதுமக்களின் பொதுபோக்குவரத்து சாதனங்களில் மிக முக்கியமான ஒன்றாக ரயில்கள் திகழ்கிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கும் ரயில்களை பராமரிப்பதில் குறைபாடுகள் நிலவுவதாக ஆங்காங்கே புகார்கள் வருவது வழக்கம். ஆனால் ரயில் படுக்கை அறுந்து விழந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ள தகவல் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மாரஞ்சேரி பகுதியில் அலிகான் என்ற 62 வயதுள்ள நபர் வசித்து வந்தார். பொன்னானி பகுதியில் எல்.ஐ.சி முகவராக செயல்பட்டு வந்த இவர் கடந்த ஜூன் 15 ஆம் தேதி தனது நண்பர் முகமது என்பவருடன் பஞ்சாப் மாநிலம் ஜலந்தருக்கு ரயிலில் செல்ல முன்பதிவு செய்தார். அதன்படி எர்ணாகுளம் - டெல்லி இடையே இயக்கப்படும் மில்லேனியம் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் பயணம் மேற்கொண்டார். 3 அடுக்குகள் கொண்ட படுக்கையில் கீழ் படுக்கையில் அலிகான் தூங்கி கொண்டிருந்தார். நடுவே உள்ள படுக்கையில் வெறொருவர் பயணித்துள்ளார். 


அதிகாலை 4 மணியளவில் ரயில் தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் பகுதியில் சென்றபோது திடீரென நடுபடுக்கை அறுந்து அலிகான் மீது விழுந்தது. இதில் அவருக்கு கழுத்து எலும்புகள் உடைந்த நிலையில், கை கால்களில் படுகாயம் ஏற்பட்டது. நடு படுக்கையில் படுத்திருந்தவரும் காயமடைந்தார். இதனிடையே தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் அலிகானை மீட்டு முதலில் சிகிச்சைக்காக வாரங்கல் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் நிலைமை மோசமடைய ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அலிகானுக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென இறந்தார். 


இந்த சம்பவம் தொடர்பாக வாரங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அலிகான் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் தெலங்கானாவில் இருந்து மலப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் சக ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. 


அதில், “அலிகான் மீது விழுந்த படுக்கையை அதிகாரிகள் சோதனையிட்டபோது அது நல்ல நிலையில் இருப்பது தெரிய வந்தது. நடு படுக்கை உடைந்து விழவில்லை. சரியாக அதனை பயணி சங்கிலியில் மாட்டாமல் சென்றதால் தான் விபத்து நடைபெற்றுள்ளது. அலிகானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்தியன் ரயில்வே ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.