•  நனவாகிறது இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பு.. 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் இன்று தொடக்கம்..!


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாதம் ரூ.1000 வழங்கும் அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகிறது.  நேற்றே பல பெண்களின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டு இன்ப அதிர்ச்சி அளித்தது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அதற்கான ஏடிஎம் கார்டுகளையும் வழங்குகிறார். 



  • ‘நிபா வைரஸ் பரவலை தடுக்க 6 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க தமிழக கேரள எல்லைப் பகுதியில் சுகாதாரத்துறையினர் மருத்துவக் குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே  கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 



  • திருப்பதியில் பிரம்மோற்சவ விழா.. சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அரசுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு 


திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த வருடம்  இரண்டு முறை பிரம்மோத்சவம் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.



  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான்.. அங்கீகரித்து குறிப்பிட்ட ஐக்கிய அரபு நாடுகள்


டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஐக்கிய அரபு நாடுகள் இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்து குறிப்பிட்ட வீடியோவை துணை அதிபர் பகிர்ந்துள்ளார். இது அந்த பகுதியின் மீதான பாகிஸ்தானின் நீண்டகால பிராந்திய உரிமைகோரலுக்கு குறிப்பிடத்தக்க வகையில் ஒரு முடிவை கொண்டு வரும் என கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு நாடுகள் இந்தியாவின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 



  • சம்பிரதாய ஆட்டத்தில் மோதும் இந்தியா - வங்கதேசம் அணிகள்.. ஆனாலும் காத்திருக்கும் சாதனை..!


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.ஏற்கனவே இந்தியா இறுதிச்சுற்றுக்கு தகுதிப் பெற்ற நிலையில், இப்போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே அமையும். முன்னதாக குரூப் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோல்வியடைந்த வங்கதேசம் அணி தொடரிலிருந்து வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது. மதியம் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் பிரேமதேசா மைதானத்தில் நடைபெற உள்ளது.