தொண்டர்களுக்கு திருமாவளவன் கடிதம்


தொண்டர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எழுதியுள்ள கடிதத்தில், “திமுகவைப் பிடிக்காதவர்கள், திமுக கூட்டணியின் கட்டுக்கோப்பைக் கண்டு எரிச்சலடையக் கூடியவர்கள், நம்மையும் அறவே வெறுப்பவர்கள் போன்ற சக்திகள்தான் நமது கூட்டணியை சிதறடிக்கப் பார்க்கிறார்கள். நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும், தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக் கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.


புதுக்கோட்டையில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன்


விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அகழாய்வில் 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்கப் பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜாஸ்பர், சார்ட் என்ற இக்கற்கள், முன்னோர்கள் விலங்குகளை வேட்டையாடுவதற்கான கருவிகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களாகவும் பயன்படுத்தியுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் தகவல்.


ரூ.58 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே அடியாக சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்து, 58 ஆயிரத்து 280 ரூபாயை எட்டியுள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை 85 ரூபாய் அதிகரித்து,  7 ஆயிரத்து 285க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 320 ரூபாய் குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.


நான் வணிகத்திற்கு எதிரானவன் அல்ல - ராகுல் காந்தி


ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் வணிக விரோதியாக பாஜகவில் உள்ள சிலரால் சித்தரிக்கப்படுகிறேன். ஆனால் நான் வணிகத்துக்கு எதிரானவன் அல்ல. நான் ஏகபோகத்திற்கு எதிரானவன், தன்னலத்தை உருவாக்குவதற்கு எதிரானவன், ஒன்று அல்லது 2 அல்லது 5 நபர்களின் வணிக ஆதிக்கத்துக்கு எதிரானவன்' என குறிப்பிட்டுள்ளார்.


தலைமை நீதிபதிக்கு கடைசி நாள்:


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்றுடன் ஓய்வு பெற உள்ளார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பதவியேற்ற அவர், தேர்தல் பத்திரங்கள் ரத்து உள்ளிட்ட பல்வேறு அதிரடியான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இதையடுத்து சஞ்சீவ் கண்ணா வரும் 11ம் தேதி அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.


சந்திரபாபு நாயுடுவிற்கு பயம் - ஜெகன்மோகன் ரெட்டி


ஆந்திராவில் சட்ட- ஒழுங்கு சரியில்லை என, உள்துறை அமைச்சர் அனிதாவை, கூட்டணியில் உள்ள துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, “சட்டம் மற்றும் ஒழுங்கு யாருடைய பொறுப்பு? அது முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இல்லையா? சட்டம் மற்றும் ஒழுங்கு சரியில்லை என்றால், யாரை நீங்கள் (கல்யாண்) கேள்வி கேட்க வேண்டும்? சந்திரபாபு நாயுடுவை இல்லையா? சந்திரபாபு நாயுடுவை கேள்வி கேட்க பவன் கல்யாணுக்கு தைரியமில்லை” என சாடியுள்ளார்.


வெள்ளை மாளிகையில் முதல் பெண் தலைமை அதிகாரி


அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அவரது தேர்தல் பரப்புரையை ஒருங்கிணைந்த சூசி வைல்ஸ் வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


எலான் மஸ்கின் சொத்து பல மடங்கு அதிகரிப்பு


எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடி (26.5 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது. முன்னதாக, டிரம்பிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தது மட்டும் இன்றி பிரசாரத்துக்கு 375 கோடி ரூபாய் அளவுக்கு நிதியும் மஸ்க் வழங்கினார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் எலான் மஸ்க்கிற்கு மந்திரி பதவி அல்லது வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பதவி கொடுப்பேன் டிரம்ப் கூறியிருந்தார்.


வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?


இந்தியா தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின், முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தொடரை வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.


தேசிய ஹாக்கி அணி - தமிழக அணி காலிறுதிக்கு முன்னேற்றம்


14-வது ஆக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அணி (சி பிரிவு) தனது கடைசி லீக் ஆட்டத்தில் அந்தமான் நிக்கோபார் உடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி கோல் மழை பொழிந்தது. முழு நேர ஆட்ட முடிவில் தமிழகம் 43-0 என்ற கோல் கணக்கில் அந்தமான் நிக்கோபாரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.