நாடாளுமன்றம் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ராகுல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில்  கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. இரண்டு கட்டங்களாக நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதி கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் நிகழ்வுகள் தொடங்கிய உடனே லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் பற்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். 


மேலும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர் அமளிக்கு வழிவகுத்ததால் நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. 


இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கியது. மக்களவையில் இன்றும் ஆன்லைன் சூதாட்ட மசோதா, ராகுல்காந்தி விவகாரம், அதானி விவகாரம்  குறித்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதேசமயம் மாநிலங்களவையில் ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். மற்றும் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அதானி விவகாரம் குறித்து கேள்வியெழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவை 2 மணி வரை மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.