தமிழ்நாடு பாஜகவின் தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிடிஆர். நிர்மல் குமார், வெளியிட்ட ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, ஞாயிற்றுக்கிழமை அன்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு சிறுமியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவர் தமிழில் ட்வீட் செய்திருந்தார்.






அதில், "இந்த #pappu-வை கூட்டிக்கொண்டு யாத்திரை போகும் அந்த 10 பேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். உண்மைச் செய்திகளைக் கண்டறிந்து வெளியிடும் ஆல்ட் நியூஸின் இணை நிறுவனரும் பத்திரிகையாளருமான முகமது ஜுபைர் இது குறித்து ஒரு ட்விட்டை வெளியிட்டார்.


அதில், "ராகுல் காந்தி தனது மருமகள் மீராயா வாத்ராவுடன் பாசமாக இருக்கும் பழைய படத்தை பாஜக தலைவர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில், ராகுல் காந்தி சிறு குழந்தைகளுடன் உல்லாசமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்" என ட்விட் செய்தார். பாஜக நிர்வாகி ஒரு கருத்தை பதிவிட, அதை ஆல்ட் நியூஸின் முகமது ஜுபைர் தவறாக புரிந்து கொண்டு, கருத்து பதிவிட்டது ட்விட்டரில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இதற்கு மத்தியில், நிர்மல் குமாரை விமர்சித்த தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முகமது ஜுபைரின் ட்விட்டை மேற்கோள் காட்டி, "துரதிருஷ்டவசமாக, அகங்காரம் பிடித்தவர்களிடம் குப்பையை தவிர வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது. பல்வேறு முகங்களை வைத்து கொண்டு பெண்கள் பற்றி சிக்கலான கருத்துகளை அவர்கள் கொண்டுள்ளவர்கள். 


 






இந்த அருவருப்பான கருத்துகளை தெரிவிப்பதற்காக தமிழ்நாடு பாஜக அவருக்கு விருது வழங்கி பெருமைப்படுத்தும். அவர், தனது தலைவரின் உத்தரவுகளை தானே பின்பற்றிகிறார்" என பதிவிட்டார்.


பெரும் சர்ச்சை வெடித்ததையடுத்து, குறிப்பிட்ட அந்த ட்விட்டர் பதிவை நீக்கிய நிர்மல் குமார், "நான் வெளியிட்ட ட்விட்டர் பதிவின் தமிழாக்கமும் மொழி பெயர்க்கப்பட்ட ஆங்கில பதிவையும் இங்கே வெளியிட்டுள்ளேன். ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான போக்கை நையாண்டி செய்வதே எனது நோக்கம். அதில், நான் உறுதியாக இருக்கிறேன். 






பொய்யான தகவல்களை வெளியிடும் முகமது ஜுபைர் போன்றோர், தமிழில் பதிவிட்ட எனது கருத்துளை தவறான கருத்துகளுடன் பகிர்ந்ததால் அதை நீக்கியுள்ளேன். தற்போது, இப்பிரச்னையை மக்களிடம் விட்டுவிடுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.