கொரோனா பரவல் இரண்டாம் அலைக்கு பிறகு, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு, பெட்ரோல் மற்றம் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு முக்கிய பிரச்சினைகள் மற்றும் ரபேல் விவகாரம், பெகாசஸ் ஸ்பைவேர் என மத்திய அரசு எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தொடர் முழுவதும் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மத்திய அரசு புதியதாக 29 சட்ட மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு மிகவும் வலுவாக எதிர்க்கும் தலைவர்களில் ஒருவரான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக கையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.




நாடாளுமன்றத்தின் மக்களவையில் 22 எம்.பி.க்களுடனும், மாநிலங்களவையில் 11 எம்.பி.க்களுடனும் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய கட்சியாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைவாக உள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை கண்டித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரான முதல்நாளான இன்று அந்த கட்சி எம்.பி.க்கள் அனைவரும் சைக்களில் பேரணியாக நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளனர்.


இந்த கூட்டத்தொடரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம் மட்டுமின்றி, கூட்டாட்சி அமைப்பு பாதிப்பு, மேற்கு வங்க மாநிலத்திற்கு தடுப்பூசிகள் முறையாக கிடைக்காதது, விவசாயிகள் பாதிப்பு,  பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை திரும்ப கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த இந்த கூட்டத்தொடர் முழுவதும் விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.




மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்ற பிறகு சந்திக்கும் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இதுவாகும். இந்த சைக்கிள் பேரணியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மறைந்த பிரதமரும், பா.ஜ.க. தலைவருமான வாஜ்பாய் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு மாட்டு வண்டியில் வந்ததுபோல, தற்போது பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணியில் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டசபை கூட்டத்திற்குல பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து  அம்மாநில அமைச்சர் பெச்சராம் மன்னா சிங்கூரில் உள்ள தனது வீட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு சைக்கிள் மூலமாக சட்டசபைக்கு வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.