கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் வெளியே வராமல் வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


 






இந்நிலையில் திரிபுராவில் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மீறி இரண்டு திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு சென்று அங்கு இருந்தவர்களை அப்புறப்படுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர்கள் அனைவரும் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மீறியதாக கூறி 30 பேரை கைது செய்துள்ளார். 


அத்துடன் அங்கு அவர் சற்று கடினமாக நடந்து கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை பார்த்த பலரும் மாவட்ட ஆட்சியரின் செயலை கண்டித்தனர். குறிப்பாக முன்னாள் திரிபுரா முதலமைச்சர் மானிக் சர்கார் மாவட்ட ஆட்சியரின் செயலை கண்டித்தார். அத்துடன் மாவட்ட ஆட்சியர் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கூறினார். 


இந்தச் சூழலில் மாவட்ட ஆட்சியர் சைலேஷ் குமார் யாதவ் இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளார் இதுகுறித்து, “இரவு நேர ஊரடங்கை மீறியவர்கள் மீது தான் நடவடிக்கை எடுத்தேன். அதுவும் மாவட்ட மக்களின் நலனுக்காக தான் அப்படி செய்தேன். எந்த ஒரு நபரையும் காயப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல. அவர்களை காயப்படுத்தியிருந்தாலும் அதற்கு வருந்துகிறேன். நான் மன்னிப்பும் கேட்கிறேன்”என ஆட்சியர் சைலேஷ் கூறியுள்ளார். 






 


திரிபுராவில் தற்போது 793 பேர் கொரோனா தொற்று பாதிப்புடன் உள்ளனர். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கடந்த 22ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.