உலகப்புகழ்பெற்ற திருக்கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆகும். இந்த கோயில் மட்டுமின்றி இங்கு வழங்கப்படும் பிரசாதமும் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் வழங்கப்பட்ட லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு மற்றம் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியது. இந்த விவகாரம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சர்ச்சைக்கு பின் லட்டு விற்பனை:


தேவஸ்தானமும் இதை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. திருப்பதியின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாக கூறி தோஷ பரிகாரமாக மகா சாந்தி ஹோமமும் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்திற்கு பிறகு திருப்பதி கோயிலில் லட்டு விற்பனை சரியும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.


ஆனால், முன்பை காட்டிலும் லட்டு விற்பனை திருப்பதியில் சக்கை போடு போட்டு வருகிறது.  வழக்கமாக தினசரி 3.50 லட்சம் லட்டுகள் விற்பனையாகி வந்த சூழலில், தற்போது தினசரி 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுகள் விற்பனையாகி வருகிறது. திருப்பதி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


4 நாட்களில் விற்பனை அமோகம்:


இதன்படி, செப்டம்பர் 19ம் தேதி 3.59 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 20ம் தேதி  3.17 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 21ம் தேதி 3.67 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 22ம் தேதி 3.60 லட்டுகளும் விற்பனையாகி இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு வரை திருப்பதியில் தினசரி 3.50 லட்சம் லட்டுக்கள் மட்டுமே விற்பனையாகி வந்த நிலையில், தற்போது தினசரி கூடுதலாக 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை லட்டுகள் விற்பனையாகி வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 14 லட்சத்திற்கும் அதிகமான லட்டுகள் விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


சர்ச்சைக்கு பிறகு லட்டு விற்பனை சரியும் என்று பலரும் கருதிய நிலையில் லட்டு விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், லட்டின் தரமும், மணமும் தரமானதாக இருப்பதாகவும் பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திருப்பதியில் லட்டு விவகாரத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக பக்தர்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, விளக்கு ஏற்றி பொதுமக்கள் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த லட்டு விற்பனை மூலமாக திருப்பதி கோயிலுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 500 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.