திருப்பதி தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு ஒரே நாளில் பத்து கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.


படையெடுக்கும் பக்தர்கள்:


இந்தியாவில் பணக்காரக் கடவுளாக அறியப்படுபவர் திருப்பதி ஏழுமலையான். இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு தருணங்களில் பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். பல நாள், பல மணி நேரங்கள் காத்திருந்து தரிசனம் செய்து செல்வதுண்டு. இது விஐபிக்களின் கோயில் என்று சொல்வதற்கேற்ப குடியரசுத் தலைவர் முதல் நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் வந்து செல்கின்றனர். அதற்கேற்ப இக்கோயிலின் வருமானமும் மற்ற எந்த கோயில்களையும் விட அதிகமாகவே இருக்கும். 




7 கோடி ரூபாயை வழங்கிய ஒற்றை பக்தர்:


இந்த நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் ஏழுமலையான் கோயிலின் திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு அறக்கட்டளைகளுக்கு 10 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது. இந்த காணிக்கைகளை தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்கள் வழங்கியுள்ளன. நேற்று வசூலான தொகையில் 7 கோடி ரூபாயை திருநெல்வேலியைச் சேர்ந்த கோபால் பால கிருஷ்ணா என்ற ஒற்றை நபர் வழங்கியுள்ளார். திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ப்ரனாதனா அறக்கட்டளை, கோஷம்ரக்‌ஷனா அறக்கட்டளை, பாலாஜி நோய்களுக்கான அறுவை சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு நிறுவனம், அன்ன ப்ரசாதம் அறக்கட்டளை, சர்வ ஸ்ரேயாஸ் அறக்கட்டளை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஆகிய 7 அறக்கட்டளைகளுக்கும் தலா ஒரு கோடி என்ற அளவில் 7 கோடி ரூபாயை நிதியாக அளித்துள்ளார்.




3 நிறுவனங்கள் 3 கோடி:


 திருநெல்வேலியைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் தலா ஒரு கோடி ரூபாயை கொடுத்திருக்கின்றன. ஏ ஸ்டார் டெஸ்டிங் & இன்ஸ்பெக்‌ஷன் ப்ரைவேட் லிமிட்டட் ஒரு கோடி ரூபாய் நிதியை ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாதனா அறக்கட்டளைக்கும், பாலகிருஷ்ணா எண்ணெய் நிறுவனம் 1 கோடி ரூபாய் நிதியை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயலா நிர்மாண் அறக்கட்டளைக்கும், சீ ஹப் இன்ஸ்பெக்‌ஷன் சர்வீசஸ் நிறுவனம் ஒரு கோடி ரூபாயை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹெரிடேஜ் ப்ரஷர்வேசன் அறக்கட்டளைக்கும் காணிக்கையாக வழங்கியிருக்கின்றன. இந்த காணிக்கைகளை நன்கொடையாளர்கள் டிடி மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தர்ம ரெட்டியிடம் வழங்கினர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் சுமார் 12 அறக்கட்டளைகள் இயங்கி வருகின்றன. இந்த அறக்கட்டளைகளுக்கு நிதியை திரட்டுவதற்காக பல்வேறு திட்டங்களை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டங்களுக்கு வரும் நன்கொடைகள் மூலம் அறக்கட்டளைகளை திருப்பதி தேவஸ்தானம் நடத்துகிறது.


வரலாற்றில் இல்லாத அளவு வசூல்:


இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரே நாளில் திருமலை திருப்பதி வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 84 கோடி ரூபாய் நிதி காணிக்கையாக அளிக்கப்பட்டது. 70 நன்கொடையாளர்கள் அந்த தொகையினை வழங்கினர். அதில் 28 நன்கொடியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ரூபாய் 1.5 கோடி ரூபாய் நிதியை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.