2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் விமானப் பயணத்துக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை அறுவிக்கப்பட உள்ளது. 


கொரோனாவுக்கு எதிரான 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய ஆர்டிபிசிஆர் பரிசோதனை தேவையில்லை என்று அறிவிக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




இது தொடர்பாக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், சுகாதாரத் துறை, விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கொண்ட கூட்டுக்குழு ஒன்று இதுதொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருக்கிறார்.
இந்தக்குழு ஒப்புதல் வழங்கும்பட்சத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய ஆர்டி-பிசிஆர் RT-PCR பரிசோதனை எடுக்கத் தேவையிருக்காது.
தற்போது, உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய பயணிகள் ஆர்டி-பிசிஆர் RT-PCR பரிசோதனை எடுத்துக் கொண்டு அதன் முடிவை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.




அதேவேளையில், சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியல் என்பதால், தம்மாநிலத்துக்குள் வரும் பயணிகள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துகொண்டுதான் வரவேண்டுமா இல்லையா என்பது முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது என்று அமைச்சர் கூறினார்.
மேலும், சர்வதேசப் பயணிகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் என்றொரு திட்டத்தைக் கொண்டுவர பல்வேறு நாடுகளும் யோசனை கூறிவரும் நிலையில் அவ்வாறு ஒரு திட்டத்தை செயல்படுத்துவது பாரபட்சம் காட்டும் செயல் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
 இந்த யோசனையை முன்வைத்த ஜி7 கூட்டமைப்புக்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது வளரும் நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படும் சதவீதம் இன்னும் குறைவாகவே இருக்கிறது. இதனால், வேக்சின் பாஸ்போர்ட் திட்டம் அப்பட்டமாக பாகுபாடு காட்டுவதாக அமைந்துவிடும் என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.




தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுவரும் நிலையில், மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தொடரும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். நாடு முழுவதும் மூன்றாம் கட்ட கோவிட்-19 தடுப்பூசி திட்டம், மே 1 முதல் செயல்படுத்தப்பட்டுவருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 23,11,69,251 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், விமானத்தில் எளிதில் பயணிக்கலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இதுவும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பெரிய அளவில் உதவும் என தெரிகிறது. மேலும் பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். இனி தடுப்பூசி போட்டவர்கள் தான் பறக்க முடியும் என்கிற நிலை ஏற்படலாம். அதற்கு முன் அனைவரும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.