எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பது கூற்று. அந்த வகையில் ராஜஸ்தானைச் சேர்ந்த காவலர் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளாக சேரிகளில் வசிக்கும் குழந்தைகளை தேடிச் சென்று அவர்களுக்கு கல்வி புகட்டி அவர்களின் வாழ்க்கையை மாற்றி வருகிறார்.


அவர் பெயர் தரம்வீர் ஜாகர். கடைநிலை காவலராக தான் இருக்கிறார். ஆனால் அவரது மனம் விசாலமானது அவரது இலக்கு உயர்ந்தது. அப்னி பாடசாலா தமிழில் சொல்ல வேண்டுமானால் உங்களின் பாடசாலை என்ற பெயரில் ஒரு  பாடசாலையை அமைத்தார். இந்தப் பள்ளியில் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை புகட்டுவார். ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் தான் தரம்வீர் இந்த பாடசாலையை முதன்முதலில் அமைத்தார்.


அப்னி பாடசாலா ஓர் அறிமுகம்:


2016 ஆன் ஆண்டு முதன்முதலில் அப்னி பாடசாலாவை தரம்வீர் ஜாக்கர் ஆரம்பித்தார். அதில் அப்போது வெறும் 5 குழந்தைகள் தான் இருந்தனர். இப்போது அவர் பள்ளியில் 450 பிள்ளைகள் படிக்கின்றனர். தான் வசிக்கும் பகுதியில் அரசுப் பள்ளி இல்லாததாலேயே அங்குள்ள பிள்ளைகளை பெற்றோர் வறுமையை சமாளிக்க யாசகம் பெற வைக்கின்றனர் என்பதே தரம்வீரின் மிகப்பெரிய ஆதங்கமாக இருக்கிறது. ஆரம்பத்தில் தரம்வீர் மட்டுமே இந்த சேவையை செய்து வந்தார்.


பின்னாளில் அவருடன் இணைந்து மூன்று மகளிர் காவலர்களும் இப்பணியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க வேண்டுமானால் அதற்கு அடிப்படையான உணவு, சீருடை, நோட்டு புத்தகத்திலிருந்து அனைத்தும் இலவசமாக தர வேண்டும். என் ஊதியத்தில் இருந்தே அதற்கான செலவை செய்கிறேன். ஆரம்பத்தில் குறைந்த அளவு குழந்தைகள் இருந்தபோது அது சுமையாக தெரியவில்லை. இப்போது 500 குழந்தைகள் என்றபோது சற்று கடினமாகவே இருக்கிறது. இருந்தாலும் நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்றார்.






ஆட்சியர் பாராட்டு:
இந்நிலையில் சுரு மாவட்ட ஆட்சியர், அண்மையில் தரம்வீரின் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு பள்ளி நடத்தப்படும் முறை குறித்து அவர் கேட்டறிந்தார். அவர் அதை மிகவும் வியந்து ரசித்து கேட்டறிந்தார். தரம்வீருக்கு அரசாங்க உதவிகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியும் கொடுத்துச் சென்றுள்ளார்.