இந்திய அரசு இன்று, அக்டோபர் 1 முதல், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, பயணம் மற்றும் நிதி பரிவர்த்தனைகளை நேரடியாகத் தாக்கும் பல புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. NPS முதலீடு முதல் ரயில் டிக்கெட்டுகள், UPI பரிவர்த்தனைகள் வரை பல துறைகளில் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
1. தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS):
அரசு சாரா NPS சந்தாதாரர்கள் இனி 100% வரை பங்கு முதலீடு செய்யலாம். இதற்கு முன்பு 75% வரம்பே இருந்தது. தனியார் துறை ஊழியர்கள் PRAN திறப்பதற்காக ₹18 e-PRAN கட்டணமும், வருடாந்திர பராமரிப்புக்கு ₹100 கட்டணமும் செலுத்த வேண்டும். APY மற்றும் NPS லைட் சந்தாதாரர்களுக்கு ₹15 கட்டணம் விதிக்கப்படும். கூடுதல் பரிவர்த்தனை கட்டணங்கள் எதுவும் இல்லை.
2. ரயில் டிக்கெட் முன்பதிவு:
இனி ரயில் முன்பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்கள் ஆதார் சரிபார்ப்பு செய்த பயணிகளுக்கே அனுமதி. முகவர்கள் 10 நிமிடங்கள் கழித்தே முன்பதிவு செய்ய முடியும். PRS கவுண்டர்களில் இருந்து டிக்கெட் வாங்குபவர்களுக்கு மாற்றமில்லை. மோசடிகளைத் தடுக்க இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
3. ஆன்லைன் கேமிங்:
ஆன்லைன் கேமிங் மசோதா 2025 இன் கீழ், 18 வயதிற்குட்பட்டவர்கள் இனி பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களில் பங்கேற்க முடியாது. விதிமீறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ₹1 கோடி அபராதமும் விதிக்கப்படும். விளம்பரதாரர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ₹50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
4. எல்பிஜி விலை மாற்றம்:
இன்று முதல் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் திருத்தியுள்ளன. இது மக்களின் சமையலறை செலவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
5. UPI பரிவர்த்தனை:
UPI மூலம் ஒரே நேரத்தில் ₹5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம். இது மோசடிகளைத் தடுப்பதோடு, பெரிய பரிவர்த்தனைகளுக்கு வசதியாகும்.
6. அஞ்சல் சேவை – ஸ்பீட் போஸ்ட்:
இனி ஸ்பீட் போஸ்டில் OTP அடிப்படையிலான டெலிவரி, ரியல்டைம் டிராக்கிங், ஆன்லைன் முன்பதிவு, SMS அறிவிப்புகள் போன்ற வசதிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு 10% தள்ளுபடி, புதிய மொத்த வாடிக்கையாளர்களுக்கு 5% தள்ளுபடி வழங்கப்படும்.