பிரதமர் மோடி விவகாரத்தில் சர்ச்சை கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாலத்தீவு தூதர் இப்ராகிம் ஷாகீப்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.


கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக லட்சத்தீவு சென்றார். இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் தனது பயண அனுபவம் தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பான அவரது சமூக வலைத்தளப்பகுதியில், “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு  நான் பிரமிக்கிறேன். இங்குள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம். இந்த பயணத்தில்  140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக எவ்வாறு உழைப்பதுஎன்பது குறித்து சிந்திக்க வைக்கும் வாய்ப்பாக அமைந்தது” என குறிப்பிட்டிருந்தார்.


ஆனால் இதற்கு மாலத்தீவு அதிகாரத்தில் இருக்கு சிலரிடம் இருண்டு எதிர்மறையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. அந்நாட்டு அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழத் தொடங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதேசமயம் மாலத்தீவு அமைச்சர்கள் கருத்துக்கு மாலத்தீவின் முன்னாள் அதிபரான முகமது நஷீத்  உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவிக்க பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு பதவியில் இருந்து நீக்கியது. 


இதற்கு இந்தியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் சல்மான் கான், அக்‌ஷய் குமார், ஷ்ரத்தா கபூர், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ஆகியோர் மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்த கருத்து எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில், மாலத்தீவின் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அங்கு இதுவரை முன்பதிவு செய்யப்பட்ட 10,500 ஹோட்டல் அறைகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ் வலைத்தள பக்கத்திலும் #BoycottMaldives  என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. அமைச்சர்கள் நீக்கம் மட்டுமே பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்ததுக்கு நடவடிக்கையாக இருக்க முடியாது என பலரும் கருத்து தெரிவித்து வருவதால் மாலத்தீவு அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறது.  இதுபோன்ற சூழலில், பிரதமர் மோடிக்கு எதிரான விவகாரத்தில் மாலத்தீவு தூதர் இப்ராகிம் ஷாகீப்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.