காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி(Rahul Gandhi) அவதூறாக பேசியதாக கூறிய வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்த நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா உள்பட 68 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியது.
ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தீர்ப்புக்கு பின் நீதிபதி வர்மாவுக்கு செசன்ஸ் நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. மேலும், வர்மா உள்பட 68 பேரின் பதவி உயர்வையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதி:
இந்த வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கிய ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா உள்ளிட்ட குஜராத்தின் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் 68 பேரின் பதவி உயர்வை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால், நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டதாக வெளியிடப்பட்டது தவறான செய்தி என தீர்ப்பை வழங்கிய நீதிபதி எம்.ஆர். ஷா தற்போது விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதி, இந்த உத்தரவின் கீழ் வர மாட்டார் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி விளக்கம்:
ஏனெனில், தகுதியின் அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என உத்தரவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் என்பதால், இந்தத் தடை அவர்களுக்கு விதிக்கப்படாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனியாரிட்டி மற்றும் தகுதியின் அடிப்படையில் பதவி உயர் வழங்கும் குஜராத் அரசு மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக மாவட்ட நீதிபதியாக வர முயற்சி செய்வோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு இடைக்கால தடை விதித்தது.
பதவி உயர்வு பெற்றவர்களில் ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கிய கீழமை நீதிமன்ற நீதிபதி வர்மாவும் ஒருவர். எனவே, இவரின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியான. இச்சூழலில், இவரின் பதவி உயர்வு நிறுத்திவைக்கப்படவில்லை என தீர்ப்பை வழங்கிய நீதிபதியே தெரிவித்திருப்பதாக Bar and bench செய்தி வெளியிட்டது.
என்ன பேசினார் ராகுல் காந்தி..?
கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டு, தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.