வங்காளதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்திற்கு சமூக ஊடக தளமான பேஸ்புக்கில் சந்தித்த ஒருவரை திருமணம் செய்து கொள்ள வந்துள்ளார். செய்தி அறிக்கைகளின்படி, ஜூலி என்று அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண் இந்து பாரம்பரியத்தின்படி அஜய்யை மணந்துள்ளார். பின்னர், ஜூலி விசாவை புதுப்பிப்பதாக கூறி அஜய்யை பங்களாதேஷுக்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்து மத முறைப்படி திருமணம்
அஜய்யின் தாய் சுனிதா கூறுகையில், ஜூலி தனது 11 வயது மகள் ஹலிமாவுடன் அஜய்யை திருமணம் செய்ய மொராதாபாத் சென்று இந்து மதத்திற்கு மாறினார். சில நாட்களுக்குப் பிறகு அஜய் தனது தாயைத் தொடர்புகொண்டு, தான் தற்செயலாக இந்திய எல்லையைத் தாண்டி சென்றுவிட்டதாகவும், இப்போது வங்கதேசத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மகனின் இரத்தம் சொட்டும் புகைப்படம்
சில நாட்கள் சென்று, பங்களாதேஷில் இருந்து தன் மகனின் இரத்தம் சொட்டும் படங்களை அவரது அம்மா சுனிதா பெற்றுள்ளார். அவர் தனது மகன் இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காட்டும் படங்களை கண்டு வருந்தியுள்ளார், இதனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. பங்களாதேஷில் இருந்து தனது மகனை மீட்டெடுக்க உதவி செய்யுமாறு நகர எஸ்எஸ்பி (சீனியர் சூப்பிரண்டு) இடம் சுனிதா ஒரு புகார் கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.
தாய் புகார்
அந்த கடிதத்தில், "ஜூலி தனது பாஸ்போர்ட் மற்றும் விசா காலாவதியாகவிருந்ததால் வங்காளதேச எல்லைக்கு தன்னுடன் வருமாறு கெஞ்சியதாக கூறினார் என் மகன். பாஸ்போர்ட் மற்றும் விசாவை புதுப்பித்த பிறகு திரும்பி வருவேன் என்று உறுதியளித்துள்ளார். பங்களாதேஷ் எல்லைக்கு அவருடன் சென்ற பிறகுதான், என் மகன் என்னை தொடர்பு கொண்டு சென்ற செய்தியை தெரிவித்தார். தற்செயலாக எல்லையைத் தாண்டியதாகவும், 10 முதல் 15 நாட்களில் திரும்பி வருவேன் என்றும் கூறினார், அது நடந்து சுமார் இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன” என்று கடிதத்தில் சுனிதா குறிப்பிட்டுள்ளார். மேலும், "இப்போது, அதே எண்ணில் இருந்து எனது மகனின் புகைப்படங்கள் எனக்கு வந்துள்ளது. ஜூலியும் அவரது நண்பர்களும் என் மகனுக்கு ஏதாவது தீங்கு செய்திருக்கலாம் என்று நான் கவலைப்படுகிறேன். எனது மகனை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும் அவருக்கு உதவவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று எழுதியிருந்தார்.