தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. புதுப்பானை பொங்கலிட்டு சர்க்கரை பொங்கல், வெல்லம் பொங்கல் தயாரித்து சூரியனை வணங்கி மக்கள் இந்நாளை கொண்டாடி வருகின்றனர். அறுவடை முடிந்த விவசாயிகள் விற்ற விளைபொருட்களின் பணத்தை தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வது வழக்கமாக இருக்கும் வேளையில் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை முக்கிய நகரங்களில் இதன் விலை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை சற்று தடுமாற்றத்துடன் வர்த்தகமாகி வந்தாலும் இந்தியாவில் நிலையாக உயர்ந்து வருகிறது. ஆசிய சந்தையில் தொடக்கத்தில் ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும், நேற்று அமெரிக்க வர்த்தகத்தில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 4615 என்ற புதிய உச்சத்தை தொட்டது. ஆனால் இன்று ஸ்பாட் சந்தையில் தங்கம், வெள்ளி விலை சரிந்துள்ளது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஸ்பாட் சந்தையில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,632.50 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டு 4,581.20 டாலர் வரையில் குறைந்துள்ளது. தற்போது 27 டாலர் சரிந்து 4599 டாலருக்கு வர்த்தகமாகிறது. இதேபோல் வெள்ளி விலை கடந்த 24 மணிநேரத்தில் ஒரு டிராய் அவுன்ஸ் வெள்ளி விலை 93.70 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டு 86.29 டாலர் வரையில் குறைந்துள்ளது. தற்போது 4.7 டாலர் சரிந்து 88.45 டாலருக்கு வர்த்தகமாகிறது.

இந்திய MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் 0.67 சதவீதம் உயர்ந்து ரூ.1,43,201-ஆக உள்ளது. வெள்ளி 1 கிலோ 0.34 சதவீதம் உயர்ந்து ரூ.2,89,000-ஆக வர்த்தகமாகிறது. இந்த உயர்வு பொங்கல் தினத்தில் தங்கம் வாங்கும் மக்களுக்கு கவனத்தை ஈர்க்கிறது. சென்னை ரீடைல் சந்தையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.13,290-ஆக உள்ளது. இதனால் ஒரு சவரன் (8 கிராம்) ரூ.80 உயர்ந்து ரூ.1,06,320-ஆக உள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.310-ஆகவும், ஒரு கிலோ ரூ.3,10,000-ஆகவும் உள்ளது.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகை கடைகள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. தங்க காயின்கள் வாங்குவோருக்கு தள்ளுபடி, மேக்கிங் சார்ஜ் குறைப்பு போன்ற ஆஃபர்கள் உள்ளன. விவசாயிகள் அறுவடை பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கம் என்பதால், இந்த சலுகைகள் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். பொங்கல் காலத்தில் தங்கம் வாங்குவது செல்வ செழிப்பு, நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது.