பரபரப்பான நகரமான உஜ்ஜைனியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஹாலகாலேஷ்வர் கோயிலுக்குச் செல்கின்றனர். பக்தியின் அடையாளமாக மலர்களை வழங்குகிறார்கள். பக்தி நிறைந்த மலர்கள் வழிபாட்டுக்கு பின்னர், ஆறுகளில் தூக்கி எறியப்படுகின்றன அல்லது நிலப்பரப்புகளில் கொட்டப்படுகின்றன.
கோயிலில் பயன்படுத்தப்படும் பூக்களால் கழிவுகள்:
பூக்கள் அதிக தீங்கு விளைவிக்காது என்று பலர் நினைக்கலாம். ஆனால், இந்தியா 140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாடு. பலரும் இதேபோல் செய்தால், தூய்மைப் பாதிக்கப்படும். இந்தியா முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து மலர் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம், அவற்றை வளங்களாக மாற்றலாம்.
உஜ்ஜைனி மஹாலகாலேஷ்வர் கோயிலுக்கு ஒரு நாளைக்கு 75,000 முதல் 100,000 பேர் வருகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் 5 முதல் 6 டன் வரை மலர் கழிவுகள் உருவாகின்றன. இந்த மலர் கழிவுகள் சேகரிக்கப்பட்டு ஒரு நாளைக்கு 3 டன் பதப்படுத்தும் ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இவை உரம், எரிகட்டிகள், உயிரி எரிபொருட்கள் போன்ற கரிம பொருட்களாக மாற்றப்படுகின்றன. ஷிவ் அர்பன் சுய உதவிக் குழுவைச் (SHG) சேர்ந்த பெண்கள் முன்னிலை வகித்து, 30 மில்லியனுக்கும் அதிகமான ஊதுபத்திகள், பிற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.
மறு சுழற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
அவர்களின் முயற்சிகள் கோயிலின் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்க உதவியது மட்டுமல்லாமல், பலருக்கு நிலையான வேலை வாய்ப்புகளையும் வழங்கியுள்ளன. மும்பையில் சித்தி விநாயகர் கோயிலிலும் இதேபோன்று மலர் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுகின்றன.
இதேபோன்று அயோத்தி, வாரணாசி, புத்த கயா மற்றும் பத்ரிநாத் போன்ற முக்கிய நகரங்களில் ஒவ்வொரு வாரமும் சுமார் 21 டன் மலர் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படுகின்றன. டெல்லியைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனம் ஒன்று, 15 கோயில்களிலிருந்து மாதந்தோறும் 1,000 கிலோவுக்கும் அதிகமான மலர் கழிவுகளைப் பெற்றுப் பதப்படுத்துகிறது.
இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கேற்ற தயாரிப்புகளை அது உருவாக்குகிறது. இதன் நன்மைகள் பன்முகத்தன்மை கொண்டவை. அதே நேரத்தில் இந்த முயற்சிகள் மூலம் பெண்கள் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். அதே நேரத்தில், புதுமை செழித்து வளர்கிறது, பயன்படுத்தி முடிக்கப்பட்ட பூக்களுக்கு ஒரு புதிய அத்தியாயம் உருவாகிறது.