இறந்து பிறந்த ட்வின்ஸ்.. வீடியோ காலில் பிரசவம் பார்த்த மருத்துவர்.. சுக்குநூறாக உடைந்த 7 ஆண்டு கனவு
பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, கர்ப்பிணி, மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவர் இல்லாத காரணத்தால் மருத்துவரின் ஆலோசனைகளை வீடியோ காலில் கேட்டு, செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இருப்பினும், இரண்டு குழந்தைகளும் இறந்தே பிறந்தது.

திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை கருத்தரிப்பு முறையால் இரட்டை குழந்தைகளுக்கு கர்ப்பமான பெண்ணின் கனவு சுக்குநூறாக உடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, கர்ப்பிணி, மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது, மருத்துவர் இல்லாத காரணத்தால் மருத்துவரின் ஆலோசனைகளை வீடியோ காலில் கேட்டு, செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இருப்பினும், இரண்டு குழந்தைகளும் இறந்தே பிறந்துள்ளது.
சுக்குநூறாக உடைந்த 7 ஆண்டு கனவு:
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் எலிமினெடு கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி. கல்யாணமாகி 7 ஆண்டுகளுக்கு பிறகும் இவருக்கு குழந்தை பிறக்கவில்லை. மருத்துவரின் ஆலோசனைகளுக்கு பிறகு, ஐந்து மாதங்களுக்கு முன்பு செயற்கை கருத்தரித்தல் அல்லது IVF முறை மூலம் இவர் கர்ப்பம் ஆனார். மருத்துவர் அனுஷா ரெட்டி என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த மாதம், விஜய லட்சுமி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகச் சென்றிருக்கிறார்.
கீர்த்தியின் கருப்பை வாய் தளர்ந்து போயிருந்தது. சில தையல்கள் போடப்பட்டு, அவரை ஓய்வெடுக்கச் சொல்லி, வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார் மருத்துவர் அனுஷா ரெட்டி. பரிசோதனைக்குப் பிறகு சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, கீர்த்திக்கும் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. நேற்று முன்தினம், அதிகாலை 4 மணியளவில், அவர் அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
வீடியோ காலில் பிரசவம் பார்த்த மருத்துவர்:
அந்த நேரத்தில், மருத்துவர் இல்லாத காரணத்தால், வீடியோ கால் மூலம், ஊசி போடுவது உட்பட பல மருத்துவ நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு செவிலியர்களுக்கு மருத்துவர் அனுஷா ரெட்டி அறிவுறுத்தி இருக்கிறார். வலி நிவாரணத்திற்காக ஊசி போடும்போது, கீர்த்தியின் தையல்கள் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.
காலை 10.30 மணியளவில், கீர்த்தியின் வயிற்றில் இருந்து இரட்டையர்கள் அகற்றப்பட்டனர். அவருக்கு நிறைய ரத்தம் வெளியேறி இருக்கிறது. இதற்கு பின்னர்தான், மருத்துவமனைக்கது மருத்துவர் அனுஷா ரெட்டி வந்துள்ளார். அப்போது, கீர்த்தியின் குழந்தைகள் இறந்துவிட்டதாக அவரிடம் கூறப்பட்டுள்ளது.
இதனால், கீர்த்தியின் 7 ஆண்டு கனவு சுக்குநூறாக உடைந்துள்ளது. மனம் உடைந்த அவர் இதுகுறித்து பேசுகையில், "எனக்கு வயிற்றில் வலி இருந்தது. மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்தோம். ஊசி போட வேண்டும் என அவர்கள் சொன்னார்கள். நான் கவலைப்பட்டேன். அதனால் நாங்கள் அரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தோம். என்ன செய்ய வேண்டும் என செவிலியர்களுக்கு தொலைபேசியிலேயே மருத்துவர் அறிவுறுத்தினார். அவர்கள் அவரது அறிவுறுத்தலின் பேரில் சிகிச்சையைத் தொடங்கினர்.
அலட்சியமாக செயல்பட்டாரா மருத்துவர்?
செவிலியர் என்னை இரண்டு முறை பரிசோதித்தார். எனக்கு ரத்தப்போக்கு தொடங்கியது. என் குழந்தைகள் வெளியே வந்த பிறகுதான் மருத்துவர் வந்தார். குழந்தைகள் இறந்துவிட்டதாக அவர் சொன்னாக். மருத்துவர் என்னைப் பரிசோதிக்கவே இல்லை" என்றார்.
கீர்த்தியின் குடும்பத்தினர், இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அலட்சியமாக செயல்பட்ட உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரங்காரெட்டி மாவட்ட சுகாதார அதிகாரி வெங்கடேஸ்வர ராவ் கூறுகையில், "கீர்த்தி, தற்போது பாதுகாப்பாக உள்ளார். சிக்கலான அறுவை சிகிச்சையை செவிலியர்கள் செய்ய அனுமதித்தது மருத்துவரின் அலட்சிய செயல். நாங்கள் முழுமையான விசாரணை நடத்தி காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகளிடம் எங்கள் அறிக்கையை சமர்ப்பிப்போம்" என்றார்.























