தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்து விகரபாத் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது துடியலா மண்டல். இங்கு மருந்து தொழிற்சாலை ஒன்று அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதி மக்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், அப்பகுதி மக்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கலெக்டர் மீது கல்வீச்சு:
இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நேற்று பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்த மாவட்டத்தின் ஆட்சியர் பிரதிக் ஜெயின் நேரில் சென்றார். அப்போது, அவருடன் அரசு அதிகாரிகளும் உடன் சென்றனர்.
மாவட்ட ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது பொதுமக்களில் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை சமாதானப்படுத்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சிலர் முயற்சித்தனர். ஆனால், நிலைமையை கட்டுக்கடங்காமல் சென்றது. அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் மாவட்ட ஆட்சியரை நோக்கி கற்களை நோக்கி வீசினர்.
நிலைமை மிகவும் மோசமானதை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் தனது காரில் ஏற முயன்றார். ஆனாலும், அவரை விடாமல் மக்கள் தாக்க முயற்சித்தனர். ஒருவழியாக மாவட்ட ஆட்சியர் தனது காரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால், கோடங்கல் பகுதி வளர்ச்சித்துறை அதிகாரி வெங்கட் ரெட்டி தாக்குதல் நடத்திய பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டார். அவரும் அவருடன் ஒரு காவல்துறை அதிகாரியும் மக்களிடம் மாட்டிக் கொண்டனர்.
உடைத்து நொறுக்கப்பட்ட கார்கள்:
ஆத்திரத்தில் இருந்த கும்பல் இவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியது. குறிப்பாக, அதிகாரி வெங்கட் ரெட்டியை மிகவும் சரமாரியாக தாக்கினர். மேலும், அரசு அதிகாரிகள் வந்த இரண்டு கார்களின் கண்ணாடிகளை கட்டைகளாலும், கற்களாலும் தாக்கி உடைத்தனர். காயமடைந்த அதிகாரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹக்கிம்பேடா, போலபள்ளி, ஆர்பி தண்டா, புலிசெர்லா மற்றும் எர்லாபள்ளிதண்டா பகுதி மக்கள் இந்த ஆலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தெலங்கானா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்திய இந்த விவகாரத்தால் அந்த மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும், அரசு அதிகாரிகள் அனைவரும் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டத்திதல் ஈடுபட்டுள்ளனர்.