Telangana Municipal Election: நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் அழுத்தம்.. உயிரை மாய்த்துக்கொண்ட பாஜக வேட்பாளர்!
தெலங்கானா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில் 6வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பிப்ரவரி 11 ஆம் தேதியான இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் பரப்புரையானது பிப்ரவரி 9 ஆம் தேதி திங்கள்கிழமை நிறைவடைந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் நாராயண்பேட்டை மாவட்டம் மக்தல் நகராட்சியில் 6வது வார்டு சார்பில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் எருகளி மகாதேவ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திங்கட்கிழமை கடைசி நாள் தேர்தல் பரப்புரையில் தெலங்கானா எம்.பி., டி.கே. அருணாவுடன் பிரச்சாரத்தில் பங்கேற்ற எருகளி மகாதேவ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த வார்டில் மட்டும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருக்கிறது. எருகளி மகாதேவ் வேட்புமனு தாக்கல் செய்ததிலிருந்து எதிர்க்கட்சிகளால் தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. நகராட்சி தேர்தல் போட்டியில் இருந்து விலகுமாறு மகாதேவ் மீது தொடக்கத்தில் இருந்தே அழுத்தம் இருந்ததாக குடும்பத்தினர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எருகளி மகாதேவ் தற்கொலை செய்துக் கொண்ட தகவலை தெரிந்ததும் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த மாநில பாஜக தலைவர் என். ராமச்சந்தர் ராவ் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது எருகளிம் மகாதேவ் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர் என்றும், வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு தேசிய பழங்குடியினர் ஆணையத்திடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேசமயம் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.லக்ஷ்மண் நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார். மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். எருகளி மகாதேவ் தற்கொலை சம்பவத்தைக் கண்டித்து ஹைதராபாத்தில் நேற்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.
ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாமா ராம்மோகன் ரெட்டி மறுத்துள்ளார். பாஜக தலைவர்கள் அரசியல் ஆதாயங்களுக்காக இவ்வளவு கீழ்த்தரமாக செயல்படுகிறார்களா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)























