தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இந்தச் சூழலில் மழை நீரில் பள்ளி குழந்தைகளுடன் பள்ளி வாகனம் ஒன்று மாட்டி கொண்ட வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வாகனத்திலிருந்த பள்ளி குழந்தைகளை அப்பகுதியினர் மீட்டுள்ளனர்.
தெலங்கானாவின் மேகபூபா நகரிலுள்ள சாலை ஒன்றில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு மச்சனப்பல்லியிலிருந்து கொடூர் செல்லும் வழியில் ஒரு ரயில்வே பாலத்திற்கு அடியில் பள்ளி வாகனம் சென்றுள்ளது. அப்போது வெள்ள நீரின் அளவு அதிகமாக இருந்துள்ளது. அதை அரியாத வாகன ஓட்டுநர் வாகனத்தை அதில் இயக்கியுள்ளார். இதன்காரணமாக வெள்ள நீர் வாகனத்திற்குள் சென்று வாகனம் பாதியில் நின்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வாகனத்தில் சுமார் 25 பள்ளி குழந்தைகள் உள்ளே இருந்துள்ளனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் வாகனத்திற்குள் இருந்த 25 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் தண்ணீரில் பாதி மூழ்கியிருந்த பள்ளி வாகனத்தை டிராக்டர் உதவியுடன் மீட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. துரிதமாக செயல்பட்டு 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய அப்பகுதி மக்களுக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் பலரும் தெலங்கானா அரசு மழை காலங்களில் சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். அத்துடன் மழை காலங்களில் வெள்ள நீர் தேங்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்