தெலங்கானா ஆளுநர் உரையின்போது ஆளுநர் தமிழிசை கூறிய தெலுங்கு கவிதை வரிகள் அரங்கத்தை கைதட்டலால் அதிர வைத்தது.
தமிழ்நாடு பாஜக தலைவராகவும், மாநில அரசியலில் ஆளுமைமிக்க பெண்ணாகவும் விளங்கியவர் தமிழிசை சௌந்தரராஜன். தன்னை எவ்வளவு ட்ரோல் செய்தாலும் தன்னுடைய செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுத்து வந்த அவர் 2019 ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பேற்றார்.
என்னதான் இரண்டு மாநிலங்களை கவனித்து வந்தாலும் தமிழிசையை தமிழ்நாட்டில் அடிக்கடி தனியார் நிகழ்ச்சிகளிலும் காண முடியும். மேலும் தெலங்கானா மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. இப்படியான நிலையில் கடந்த மாதம் தெலங்கனாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஏ ரேவந்த் ரெட்டி மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார். கடந்த வாரம் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஒருவாரத்தில் ரேவந்த் தனது செயல்பாடு மற்றும் மக்களை அணுகும் முறையில் கேசிஆரிடம் இருந்து வேறுபட்டு புதிய பாணியை கையாண்டு வருகிறார். சந்திரசேகர ராவ் போல இல்லாமல் புதிய முதலமைச்சர் கே.ரேவந்த் ரெட்டி மற்றும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே சுமூகமான உறவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சட்டப்பேரவையில் உரையாற்றினார். தனது உரையின்போது இடையில் தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கில் கவிதை ஒன்றை வாசித்தார். இதைக்கேட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி அரங்கத்தை அதிர செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Livingston: “கிறிஸ்தவராக இருந்து போர் அடித்து விட்டது” - மதம் மாறியது குறித்து நடிகர் லிவிங்ஸ்டன் பேசிய வீடியோ வைரல்