தெலங்கானா மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு, அதில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இதன்மூலம், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, தெலங்கானாவில் ஆட்சியில் இருந்த சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சி தூக்கி எறியப்பட்டது.
இந்தநிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி வெற்றிபெற்றாலும், யார் முதலமைச்சராக பொறுப்பு ஏற்பார்கள் என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்த முதலமைச்சர் பதவிக்கு தெலங்கானா கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பாட்டி விக்ரமார்கா மற்றும் காங்கிரஸ் மாநிலக் குழுவின் முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி ஆகியோரிடம் கடும் போட்டி நிலவியது.
இதையடுத்து, தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டிதான், அடுத்த முதலமைச்சராகவும், காங்கிரஸ் சட்டசபை கட்சி தலைவராகவும் செயல்படுவார் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. அதன்படி, 56 வயதான ரேவந்த் ரெட்டி தெலங்கானாவின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவானது ஹைதராபாத்தில் உள்ள எம்.பி. விளையாட்டரங்கில் இன்று மதியம் 1 மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக, முதலமைச்சராக இன்று பதவி ஏற்ற ரேவந்த் ரெட்டி டெல்லியில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், இன்று தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்கும் விழாவில் சோனியா காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ரேவந்த் ரெட்டிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சவாலை நிறைவேற்றிய ரேவந்த் ரெட்டி:
கடந்த 2015ம் ஆண்டு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக ரேவந்த் ரெட்டி மீது வழக்கு பதியப்பட்டது. அப்போது அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரேவந்த் ரெட்டி, கே. சந்திர சேகர் ராவுக்கு சவால் ஒன்றை விடுத்தார். அதில், “என் கைதை நான் என்றும் மறக்க மாட்டேன். முதலமைச்சர் பதவியில் உட்கார்ந்து இருக்கும் உங்களை அந்த நாற்காலியில் இருந்து ஒருநாள் இறக்கிவிடுவேன். அன்று இறந்தாலும் எனக்கு சந்தோஷம்” என்றார்.
சரியான 8 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 2023 ம் ஆண்டு தனது சவாலை நிறைவேற்றிய ரேவந்த் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள எம்.பி. ஸ்டேடியத்தில் முதலமைச்சராக இன்று மதியம் 1 மணிக்கு பதவியேற்றார். ரேவந்த் ரெட்டி நாட்டின் புதிய மாநிலமான தெலுங்கானாவின் இரண்டாவது புதிய முதலமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ரேவந்த் ரெட்டி?
ரேவந்த் ரெட்டி 1969 ஆம் ஆண்டு பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் மகபூப்நகரில் பிறந்தார். ரெட்டி தனது மாணவர் அரசியலை ஏபிவிபியில் தொடங்கினார். பின்னர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.
2009-ல் ஆந்திராவின் கோடங்கல் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014ல் தெலுங்கானா சட்டசபையில் தெலுங்கு தேசம் கட்சியின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017ல் ரேவந்த் ரெட்டி காங்கிரசில் இணைந்தார் ஆனால், 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார். இருப்பினும், காங்கிரஸ் அவர் மீது நம்பிக்கை வைத்து. 2019 மக்களவைத் தேர்தலில் மல்காஜ்கிரியில் அவருக்கு சீட் கொடுத்து, அதில் அவர் வெற்றி பெற்றார். 2021ல் காங்கிரஸ் அவருக்கு பெரிய பொறுப்பை கொடுத்து மாநில தலைவராக்கியது. அதன்பின்னரே, முதலமைச்சர் பதவிக்கு செல்லும் வரை போராடி முன்னேறினார்.