உலக நாடுகளில் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார ஆய்வறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. 


சமீபத்தில், 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக கூகுள் அறிவித்தது. பணி நீக்கத்தை பொறுத்தவரையில், அமேசான் நிறுவனம் பல்வேறு கட்டமாக மேற்கொண்டு வருகிறது. சுமார் 2 ஆயிரத்து 300 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்திருந்தது.


தொடரும் பணி நீக்கம்:


அதேபோல, உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம், கடந்த ஜுன் மாதம், அந்நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 5 சதவிகிதம் அதாவது 11 ஆயிரம் பேர் ஒரே அடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்தது. வெளிநாடு மட்டும் இன்றி, இந்தியாவிலும் இந்த போக்கு தொடர்ந்து வருகிறது.


இதனால், பெரு நிறுவனங்களில் அறிவிக்கப்பட்ட பணி நீக்கத்தால் இந்தியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டிங் சர்வீஸில் (டிசிஎஸ்) பணி நீக்கம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியானது.


டிசிஎஸ் நிறுவனத்தில் பணி நீக்கமா?


இது, ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், வெளியான தகவல் குறித்து டிசிஎஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ஒரு பணியாளரை பணியமர்த்தியபோது, அவர்களின் நீண்ட கால வாழ்க்கைக்கான திறமையை வளர்த்தெடுப்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதால், பணிநீக்கம் மேற்கொள்வதற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை என டிசிஎஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு டிசிஎஸ் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட் அளித்த பேட்டியில், "வேலையை இழந்த ஸ்டார்ட்அப் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தப் பார்க்கிறோம்" என்றார்.


மூத்த அதிகாரி விளக்கம்:


டிசிஎஸ் நிறுவனத்தில் பணி நீக்கம் இருக்குமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "நாங்கள் அதைச் செய்ய மாட்டோம் (பணிநீக்கம்). நிறுவனத்தில் திறமையானவர்களை வளர்ப்பதில் நாங்கள் நம்புகிறோம். எனவே, பணி நீக்கம் மேற்கொள்ளப்படாது.


பல நிறுவனங்கள் இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஏனெனில், அவர்கள் விரும்பியதை விட அதிகமான பணியாளர்களை பணியமர்த்தினர். அதே நேரத்தில், கவனமாக இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தில் ஒரு ஊழியர் சேர்ந்தவுடன், அவர்களின் மதிப்பை உயர்த்துவது நிறுவனத்தின் பொறுப்பு.


குறிப்பிட்ட பணியாளரிடம் தேவைக்கு ஏற்ற திறமையை விட குறைவாக இருந்தால், பணியாளருக்கு அதிக நேரம் கொடுத்து பயிற்சியளிப்பதில் கவனம் செலுத்துகிறோம். 6 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனம், முந்தைய ஆண்டுகளைப் போலவே ஊதிய உயர்வை அறிவிக்கும்.


வெவ்வேறு தொழில் நுட்பங்களில் பல்வேறு தொழில்களில் உற்சாகமான வேலைகளைச் செய்து வருகிறோம். அதில் எல்லாம் பங்கு கொள்ள சில தனி திறமைகள் தேவை என்று நினைக்கிறேன். ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சிறப்பாக பணி செய்து குறுகிய காலத்தில் பணியில் இருந்து தூக்கப்பட்டவர்களை பணியில் அமர்த்து வருகிறோம்" என்றார்.