TN Corona LIVE Updates: தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 364 நபர்கள் உயிரிழப்பு
கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் கொரோனா வைரசின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இன்று கொரோனா வைரசின் தாக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 59 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 267 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவால் 364 நபர்கள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் புதிய உச்சமாக 364 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“ கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டலத்திற்கு இரண்டு எண்ணிக்கையில் மண்டல அமலாக்கக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது நாள்தோறும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதத் தொகையையும், விதிகளை மீறி நடத்தப்படும் கடைகளை மூடி சீல் வைத்து அதன் உரிமையாளர்களிடம் அபாரதத்தையும் வசூலித்து வருகிறது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய சென்னை மாநகராட்சியால் 200க்கும் மேற்பட்ட முன்கள தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்ய்பட்டவர்களும், அவர்களது குடும்பத்தாரும் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலன் கருதி, அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களில் ஒரு சிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளை விட்டு வெளியே வருவதாக புகார்கள் வருகிறது. இந்த செயலினால் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மருத்துவர் அறிவுறுத்திய நாட்கள் வரை வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதனை மீறி வீடுகளை விட்டு வெளியே வருபவர்களிடம் சென்னை மாநகராட்சி மூலம் முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கவும், இரண்டாவது முறை மீண்டும் வீடுகளை விட்டு வெளியே வருவது கண்டறியப்பட்டால் கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 044 25384520 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். “
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுளது.
கொரோனா தொற்று இரண்டாம் அலையில் சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள் என சுகாதாரத்துறையில் பணியாற்றும் பலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பின்படி, கொரோனா இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 269 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக பீகாரில் 78 மருத்துவர்களும், உத்தரபிரதேசத்தில் 37 மருத்துவர்களும், டெல்லியில் 28 மருத்துவர்களும், ஆந்திராவில் 22 மருத்துவர்களும், தெலுங்கானாவில் 19 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனார் 30 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அவர்களுக்கான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள், ரெம்டெசிவிர் மருந்துகளின் தேவைகள் அதிகரித்துள்ளது.
இதை உடனடியாக நிவர்த்தி செய்வதற்காகவே முதல்-அமைச்சர் மக்கள் கொரோனா தடுப்பு நிதி அளிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, கடந்த 7-ந் தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் பொறுப்பு ஏற்றுக்கொண்ட 10 நாட்களில் ரூபாய் 69 கோடி நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மேலும் 1,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87,749 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 33 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,212 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றின் 2ஆவது அலையில் தமிழ்நாட்டில் 11 டாக்டர்கள் உயிரிழந்துவிட்டதாக இந்திய மருத்துவ சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 78 டாக்டர்கள் உள்பட 269 டாக்டர்கள் இறந்ததாக கூறியுள்ளது.
ஆக்சிஜன், தடுப்பூசிகள், உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க தமிழ்நாட்டிலேயே உற்பத்தி நிலையங்களை தொடங்கவும், மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் உருவாக்கவும் ஆணையிட்டுள்ளார். டிட்கோ நிறுவனம் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவு, உதவி அளிக்கும் என்று முதல்வர் கூறினார்.
பத்மஸ்ரீ விருது பெற்றவரும் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால் கொரோனாவுக்கு உயிரிழந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 66
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 3.11 லட்சம், நேற்று 2.81 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 2.62 லட்சமாக குறைந்தது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 49 லட்சத்து 65 ஆயிரத்து 463-இல் இருந்து 2 கோடியே 52 லட்சத்து 28 ஆயிரத்து 996-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 ஆயிரத்து 329 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்து 390-ல் இருந்து 2 லட்சத்து 78 ஆயிரத்து 719-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 436 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 76இல் இருந்து 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ரெம்டெசிவர் மருந்து பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தில் தனியார் மருத்துவமனைகள் விண்ணப்பித்து ரெம்டெசிவர் மருந்தை பெறலாம். கொரோனா நோயாளிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்து தனியார் மருத்துவமனைகள் மருந்தை பெற்றுக்கொள்ளலாம். மருத்துவமனை விவரம், நோயாளியின் விவரம், தொற்று அறிகுறி, இணைநோய் விவரங்களை பதிவிட வேண்டும்.
இந்தியாவில் இதுவரை 18.44 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், ஒரேநாளில் 15.10 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 69.95 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மாநில மற்றும் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.
உலகம் முழுவதும் 16.42 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 34.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 14.41 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 24,215 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் 364 பேர் உயிரிழந்தனர். பிரேசிலில் ஒரே நாளில் 33,631 பேர் பாதிப்படைந்தனர். 1,039 பேர் உயிரிழந்தனர்.
Background
தமிழகத்தில் கொரோனா வைரசின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இன்று கொரோனா வைரசின் தாக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 59 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 267 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவால் 364 நபர்கள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் புதிய உச்சமாக 364 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -