Tamil News Today : அனைத்து அன்னதானக் கோயில்களிலும் அன்னதானம்
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
திங்கள் முதல் வியாழக்கிழமை வரை அனைத்து அன்னதானம் வழங்கும் கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்னதானக் கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் உணவுப் பொட்டலங்களாக அன்னதானம் வழங்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு
தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1653இல் இருந்து 1,697 ஆக அதிகரித்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 232 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 27 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,337 ஆக உயர்ந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் முகாம்களில் மாலை 4 மணி வரை 12.74 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 3ம் அலை வரக்கூடாது. வந்தால் சமாளிப்பதற்கு தேவையான கட்டமைப்புகள் தயாராக உள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களுடன், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, இடையப்பட்டி பகுதியைச் சார்ந்த அதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே சி வீரமணி முறைகேடாக ஆத்து மணலை அள்ளி அவரது இடத்தில் பதுக்கி வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டறிந்து வேலூர் கனிம வளத்துறை அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் கனிம வளத் துறையினர் விரைந்து சென்று பதுக்கிய மணலை அளவீடு செய்துள்ளனர். அப்போது சுமார் 551 யூனிட் மணல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு 33 லட்சம் என்று மதிப்பீடு செய்து அந்த அறிக்கையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள மணல் உரிய ஆவணம் இல்லாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் 551 யூனிட் மணல் உள்ளது என திருப்பத்தூர் ஆட்சியரிடம் கனிமவளத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் புதிய முதலமைச்சரை கட்சி தலைமை தேர்வு செய்யும் என காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளின் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக கொள்முதல் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை 1, 2020-21 க்கான நேரடி நியமன பணிக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழியே (http://trb.tn.nic.in) விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
நாடுமுழுவதும் கோவிட்-19-க்கான தடுப்பு மருந்து இதுவரை 80 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.
.படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டையை மத்திய அரசு வழங்க உள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீனவ மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "பழவேற்காடு முகத்துவாரத்தை நிலைப்படுத்தும் பணிக்காக 26.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும்.
நாடு முழுவதும் துறைமுகம் அரசு அமைக்க மிக முக்கிய நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை காசிமேடு உள்பட நாடு முழுவதும் 5 துறைமுகங்கள் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட உள்ளன என்றும், இத்தோடு தமிழகத்தில் புதிய 6 துறைமுக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
பழவேற்காடு துறைமுகம் அமைக்க தமிழக அரசு ஆராய்ந்து, கோரிக்கை வைத்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
கடற்பாசி வளர்ப்பு வருமானம், வேலைவாய்ப்பு தரும் தொழிலாக உள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கடற்பாசி வளர்ப்புக்கு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
Background
கொரோனா மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான உயர்நிலை ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மத்திய அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. நாட்டின் ஒரு சில பகுதிகளில் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டார். பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்காக மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்குமாறும் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -