செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் தொடக்க விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி செஸ் கரை வேட்டி மற்றும் துண்டு அணிந்து வந்துள்ளார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடற்கரை கோயில் வெண்கல சிலையை நினைவு பரிசாக அளித்து வரவேற்றார். அதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.


அதில், “செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று. அதிலும் குறிப்பாக இந்த விளையாட்டு போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வந்துள்ளது இந்தியாவிற்கு மிகவும் பெருமையான தருணம். நான் அவரை தமிழ்நாடு முதலமைச்சர் என்ற சார்பில் வரவேற்கிறேன். 


நம்முடைய பிரதமர் மோடி செஸ் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். குஜராத் முதலமைச்சராக இருந்த போது செஸ் விளையாட்டு போட்டியை அங்கு நடத்தினார்.  அத்துடன் புடான் அரச குடும்பம் இந்தியாவிற்கு வந்த போது பிரதமர் மோடி அவர்களுக்கு செஸ் செட்டை வழங்கினார். 


 






இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் சூழல் உருவாகும் பட்சத்தில் அதை தமிழ்நாடு நடத்த வேண்டும் என்று நான் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். அதன்பின்னர் மார்ச் 16ஆம் தேதி இதற்கான முறையான அறிவிப்பை நான் வெளியிட்டேன். இதற்காக நான் 18 குழுக்களை நியமித்தேன். அதன்பின்னர் 4 மாதங்களில் இந்த ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளோம்.


இந்தியாவிலுள்ள 75 கிராண்ட் மாஸ்டர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். இந்தியாவின் மொத்த கிராண்ட் மாஸ்டர்களின் 36 சதவிகிதம் தமிழ்நாடு வைத்துள்ளது. ஆகவே இந்தியாவின் செஸ் தலைநகரமாக சென்னை விளங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண