TN Corona LIVE Updates :தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு புதிய உச்சம்
கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 075 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 150 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 31 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 335 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 486 நபர்கள் கொரோனா வைரசில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் இந்த நிலை ஏற்படாமல் இருப்பதற்காக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, கடந்த ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாகவும், இதனால் அந்த ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தகவல் தெரிவித்தார். ஆக்சிஜனை திரவமாக்குவதற்கு வெப்பநிலையை உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், தமிழகத்தில் சிறியவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில பகுதிகளில் பெற்றோர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதால், அவர்களின் குழந்தைகளின் பராமரிப்பும், பாதுகாப்பும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. இதை நீக்குவதற்காக, தமிழகத்திலே முதன் முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளின் பராமரிப்பிற்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையே உள்ளது. தமிழகத்திலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்துகள் பற்றாக்குறை பெரியளவில் இல்லாவிட்டாலும், ஆக்சிஜன் உற்பத்தி, ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அடுத்த ஒரு வாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். இந்த பணிகள் அனைத்தும் வரும் 25-ந் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிதது வருவது போலவே, புதுவையிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும்,அந்த மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும் கொரோனா தடுப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். இன்று ஆய்வு மேற்கொண்ட அவர், புதுவையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகப்படுத்தியுள்ளதாகவும், ரெம்டெசிவிர் மருந்துகள் போதுமான அளவில் உள்ளதாகவும் கூறினார். மேலும், கொரோனா தொற்று குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. புதியதாக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொதுமக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் நிதியுதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சம் நிதியை இந்திய கம்யூனிஸ்டு சார்பில் வழங்கினார். அதேபோல, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட மாநில செயலாளர் பாலகிருஷ்ணனும் முதல்வரை நேரில் சந்தித்து, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் நிதியை வழங்கினார்.
கொரோனா இரண்டாவது அலைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டியதாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த கொரோனா வைரஸ் மரபியல் மாற்றம் ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (INSACOG) மூத்த விஞ்ஞானி ஷாகில் ஜமீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
கொரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவும்,உரிய நிவாரணங்களை வழங்கவும் அதிமுக சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் கொரோனா நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் 27 நாட்களுக்குப் பிறகு, தினசரி அன்றாட கொரோனா பாதிப்பு 3 லட்சத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 நேரத்தில் 2,81,386 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,78,731 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
புதிய பாதிப்புகளை விட, குணடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால், இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 35,16,997 ஆக இன்று சரிந்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 14.09% ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 1,01,461 குறைந்துள்ளது.
திருவாரூர், திருவண்ணாமலை, ராணிபேட், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வெறும் ஒரு சதவீதத்திற்கும் குறைவானோர் மட்டுமே கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் போட்டுள்ளனர்.
திருவள்ளூர் , கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல் , தஞ்சாவூர், விழுப்புரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தர்மபுரி,தூத்துக்குடி , ராமநாதபுரம், சிவகங்கை, காஞ்சிபுரம், கரூர், தென்காசி, தேனி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வெறும் 2%க்கும் குறைவானோர் மட்டுமே கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் போட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுனால வரையில் 16 லட்சம் பேருக்கு (16,99,245) கொரோனா தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,312 பேருக்கு தடுப்பூசி டோஸ் நிர்வகிக்கப்பட்டுள்ளது.
தொண்டு நிறுவன பணியாளர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 10 பேரையாவது தடுப்பூசி போட வைக்க வேண்டும். தடுப்பூசி குறித்த வதந்திகளையும் தவறான கருத்துகளையும் எதிர்த்து மருத்துவரீதியான உண்மைகளை மக்களிடையே பரப்ப வேண்டும். தனிமனித விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க கொரோனா தொற்று குறையும் என்று சென்னை மண்டல மக்கள் தொடர்பு இயக்குனர் ஜெ.காமராஜ் தெரிவித்தார்.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்ளுதல் குறித்த காணொலி அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிராமங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். மாநில சுகாதாரச் செயலர்கள் வட்டார அலுவலர்களுடன் தினசரி மறு ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களின் பங்களிப்பை உறுதி செய்யவேண்டும் என்று நிதி ஆயோக் மாநில அரசுகளுக்கு அறிவுறித்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட வழிமுறைகளில், " களப்பணியில் ஈடுபடும் ஆஷா உள்ளிட்ட குழுக்களுக்கு கொரோனா பரவல் கட்டுப்பாடு , பரிசோதனை தொடர்பான பயிற்சிகளை அளிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற சுகாதார மற்றும் துப்புரவு மேம்பாட்டுக் குழுக்களை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முதன்மை செயல்பாட்டாளர்களாக ஈடுபடுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பங்களிப்பை இந்தச் சூழலில் உறுதிசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர கொரோனா பாதிக்கப்படும் கிராமப்புற மக்களுக்கான தனிமைப்படுத்துதல், கொரோனா கேர் மையங்களை அமைத்தல், அர்ப்பணிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைப்பிரிவுகளை உருவாக்குதல் உள்ளிட்டவற்றையின் மாநிலங்கள் உறுதிசெய்யவேண்டும்" என அந்த வழிமுறைகளில் மத்தியக்குழு குறிப்பிட்டுள்ளது.
பொது இடங்களில் நீராவி வழங்குவதை அனைவரும் நிறுத்த வேண்டும். பொது இடங்களில் நீராவி அளிக்கும் முறை கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கும் என்று தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிகை விடுத்தார்.
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா கொரோனா நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். புதுப்பேட்டை, காலா, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர்.
மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களில் மேலும் 51 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக மாற்றப்பட்டதற்கு ஏற்ப கோவின் இணையளம் சீரமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதன் காரணமாக, இனிமேல் ஆன்லைன் மூலம் இரண்டாவது டோஸ் கோவிஷீல்டு தடுப்புசி போட்டுக்கொள்வதற்கு பயனாளிகள் 84 நாட்களுக்கு குறைவாக முன்பதிவு செய்ய முடியாது
மேலும், 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு, ஆன்லைன் மூலம் ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவுகள் செல்லுபடி ஆகும் என்றும், அத்தகைய பயனாளிகள், 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட வந்தால், அவர்களை திருப்பி அனுப்ப கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
கொரோனா சிகிச்சைக்காக டிஆர்டிஒ உருவாக்கி உள்ள 2 DG என்ற புதிய மருந்தினை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிடுகிறார்.
2 DG என்றால் என்ன?
டிஆர்டிஓ-வின் ஆய்வகமான அணு மருந்தியல் மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம், ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரிஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள 2-டிஜி (2-DG) என்ற தடுப்புமருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மே 1-ஆம் தேதி அனுமதி அளித்தது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெற்ற பல்வேறு கட்ட சோதனைகளில், 2-டிஜி மருந்தில் உள்ள மூலக்கூறுகளால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் விரைவாக குணமடையவும், பிராணவாயுவின் தேவையைக் குறைக்கவும் முடியும் என்பது தெரியவந்துள்ளது.
படம்: ஹைதரபாத் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மைய ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட உயிரணு வளர்ப்பில்
2-DG தடுப்பு மருந்து சார்ஸ் கொரோனா வைரஸ் வளர்ச்சியை தடுப்பதோடு, தொற்று பரவலையும் குறைக்கிறது.
மிதமானது முதல் தீவிரமானது வரை தொற்று உள்ள நோயாளிகளுக்கு பொதுவான மருந்துகளுடன் 2-டிஜி மருந்தையும் சேர்த்து வழங்குவதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
மாவட்டங்களுக்குள்ளேயும், மாவட்டத்திற்கு இடையேயும் பயணம் மேற்கொள்வதற்கு இ-பதிவு இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
கோவிட் நோய்த் தொற்று மேலாண்மையின் ஒரு பகுதியாக Syndromic approach வியூகத்தில் தமிழக அரசு இடைக்கால கொரோனா சிகிச்சை மையத்தை (ICCC) உருவாக்கியுள்ளது.
Syndromic approach என்றால் என்ன?
கிராமப் புறங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் சில நாட்களுக்கு பிறகே அறிவிக்கப்படுகிறது. அதிலும் சிலருக்கு, பரிசோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்த பிறகும், சிலர் கொரோனா அறிகுறிகளால் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே, கொரோனா பரிசோதனை முடிவை மட்டும் நம்பாமல், கொரோனா அறிகுறிகள் அடிப்படையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த இடைக்கால கொரோனா சிகிச்சை மையத்தை (ICCC) தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
காய்ச்சல், வறட்டு இருமல், உடல் சோர்வு, சுவை மற்றும் வாசனை இழப்பு, தொண்டை எரிச்சல், தலைவலி, உடல் வலி, வயிற்றுப்போக்கு, தோல் அரிப்பு மற்றும் வெகு சில பாதிப்புகளில் கண்கள் சிவப்பாதல் ஆகியவை கொரோனா நோயாளிகளிடம் பொதுவாக காணப்படும் அறிகுறிகள் ஆகும்.
இதன் கீழ், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், அனைத்து மாநகராட்சிகளிலும் (மண்டலத்திற்கு ஒன்று) , அனைத்து நகராட்சிகளிலும் ஒரு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையம் இடைக்கால கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும். ஓவ்வொரு சிகிச்சை மையத்திலும், குறைந்தபட்சம் 30 கொரோனா படுக்கைகள் உருவாக்கப்படும். லேசான மற்றும் மிதமான அறிகுறிகள் கொண்ட நோயாளிகள் இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில், கிட்டத்தட்ட 60% உயிரிழப்புகள், வெறும் 6 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் பணியிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் இதர குழுக்களின் இருப்பிடங்களில் தடுப்பு மருந்து முகாமினை நடந்த சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
குறைந்தது 30க்கும் மேற்பட்ட நபர்கள் பயன்பெறுவார்கள் என்றால் மட்டுமே தடுப்பூசி மையம் அமைக்கப்படும். முதலில், 45 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்தது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளின் உறுப்பினர்களை கொண்ட ஆலோசனை குழுவை நியமித்திருப்பது தமிழக முதலமைச்சர் அனைவரையும் ஒருங்கிணைத்து சீரிய நிர்வாகம் தருகிறார் என்பதற்கு இந்தியாவிற்கே எடுத்துக்காட்டு என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை விட 10 மடங்கு கூடுதலாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. துணை சகாரா பகுதிகளில் இந்த விகிதம் 1.6 முதல் 4.1 வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை, அதன் அதிகாரப்பூர்வ எண்ணிகையை விட 2.97 மடங்கு கூடுதலாக உள்ளது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளில் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கைக்கும், ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கைக்கும் உள்ள இடைவெளி குறைவாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா பெருந்தோற்றுக்கு 60 லட்சத்துக்கும் அதிகமானோர் (6.9 மில்லியன்) உயிரிழந்துள்ளதாக Institute for Health Metrics and Evaluation என்ற ஆய்வு மையம் கணித்துள்ளது. உலக நாடுகள் அதிகாரப்பூர்வ அறிவித்த இறப்பு எண்ணிக்கையை ( 37 லட்சம்) விட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்தியாவில், இதுநாள் வரையில் 248,016 கொரோனா உயிரிழப்புகள்ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது. ஆனால், IHME ஆய்வில் 736,811 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Country | Total COVID-19 deaths | Reported COVID-19 deaths |
United States of America | 912,345 | 578,555 |
India | 736,811 | 248,016 |
Mexico | 621,962 | 219,372 |
Brazil | 616,914 | 423,307 |
Russian Federation | 607,589 | 111,909 |
United Kingdom | 210,076 | 150,815 |
தமிழகத்தில் ~ ஜூன் 3 அன்று கொரோனா உச்சத்தைத் தொடும் என ஐஐடி கான்பூர் கோவிட்-19ன் கணித மாதிரிகள் (Predictive Model Analsis) கணித்துள்ளன. அதன்படி, ஜூன் 3ம் தேதியன்று தமிழ்நாட்டில் 43,426 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்படும்.
அதாவது, கொரோனா இரண்டாவது அலையில் தமிழகத்தின் அதிகபட்ச அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 43,426 ஆக இருக்கும் என்றும், அது ஜூன் 3ம் தேதி ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்பின், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கும்.
Background
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 075 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 150 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 31 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 335 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 486 நபர்கள் கொரோனா வைரசில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -