TN Corona LIVE Updates :தமிழகத்தில் ஒரே நாளில் 397 நபர்கள் கொரோனாவினால் உயிரிழப்பு
தமிழகம் மற்றும் இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் முதல் கொரோனா ஹோம் டெஸ்ட் கிட் ரூ.250 விலையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் மக்களுக்கு கவலை அளிக்கும் விதமாக அமைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த வாரம் 30 ஆயிரம் என்ற அளவில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், இன்று மாநிலத்திலே முதன்முறையாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது, தமிழகத்தில் இன்று புதியதாக 35 ஆயிரத்து 579 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 73 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 17 லட்சத்து 34 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 4 லட்சத்து 62 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டர்களில் மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 390 நபர்கள் ஆவர். சென்னையில் மட்டும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 667 ஆகும். மாநிலம் முழுவதும் மொத்தம் தொற்று உள்ளவர்களில் ஆண்கள் மட்டும் 10 லட்சத்து 33 ஆயிரத்து 741 ஆகும், பெண்கள் 7 லட்சத்து ஆயிரத்து 25 நபர்கள் ஆவார்கள், மூன்றாம் பாலினத்தவர் 38 நபர்கள் ஆவர். இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 19 ஆயிரத்து 919 நபர்கள் ஆவார். பெண்கள் 15 ஆயிரத்து 660 நபர்கள் ஆவார். இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 368 நபர்கள் ஆவர். இதனால், குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் 14 லட்சத்து 52 ஆயிரத்து 283 நபர்களாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் 397 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மாநிலத்திலே முதன் முறையாக ஒரே நாளில் சுமார் 400 நபர்கள் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 185 பேர் தனியார் மருத்துவமனையிலும், 212 நபர்கள் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதனால், மொத்த உயிரிழப்பு மாநிலம் முழுவதும் 19 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 105 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தினசரி 2.50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் தினசரி 300க்கும் மேற்பட்டோர் உயிரழந்து வருகின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்கள் பெரும்பாலோனார் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதால், இதர கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக ரெம்டெசிவிர் மருந்து சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டது. இதனால். இந்தியாவில் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரித்தது. ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படும் அளவுக்கு அதன் தேவை அதிகரித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது. இதற்கு பதிலாக, ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவ வல்லுனர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் அடங்கிய கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழு ஒன்றை முதல்வர் அமைத்துள்ளார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் அடங்கிய இந்த குழுவினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 22-ந் தேதி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் ஊரடங்கு குறித்தும் முக்கிய ஆலோசனை எடுக்கப்பட உள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைளை தொடர்ந்து எடுத்து வருகிறார். மேலும், கொரோனா தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக இன்று சேலத்திற்கு சென்றார். அங்கு அவருககு வரவேற்பு அளித்த வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 2 லட்சத்தை வழங்கினார். முன்னதாக, தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பேட்டி அளித்தபோது, தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனாலும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களில் நிலைமை கவலையளிக்கிறது. ஊரடங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கும்பலாக இருக்கும் எந்த இடத்தையும் தவிர்க்க வேண்டும் என்றார்
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கருப்பு பூஞ்சை நோய் குறித்த தேவையற்ற பீதி அனைவரது மத்தியிலும் வந்திருக்கிறது. இதுகுறித்து தேவையற்ற அச்சம் இருக்க வேண்டியதில்லை என்றார், இந்த பாதிப்பு குறித்து கண்டறிய 10 பேர் கொண்ட தனிக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் நீரிழிவு நோயாளிகள் 7 பேர் உள்பட 9 நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் நலமுடன் உள்ளதாகவும், சிகிச்சை எடுத்து வருகின்றனர் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றும் சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் உள்ளன என்றும் அவர் கூறினார்.
"கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வல்ல என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது தவறானது. ஊரடங்கு வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பது உண்மை தான். ஆனால், மக்களின் உயிரை ஊரடங்கு தான் காக்கும் என்பதை முதலமைச்சர் அறிந்திருப்பார் என்று நம்புகிறேன்!" என பாமக் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,69,077 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து புதிதாக குணமடைந்துள்ளனர். புதிதாக குணமடைந்தவர்களில் 75 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு மியூகோமிகோசிஸ் பாதிப்பு இருப்பதாகவும், 90 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவத்தார். தற்போது, 850க்கும் மேற்பட்டோர் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மியூகோமிகோசிஸ் சிகிச்சைக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அம்ஃபோடெரிசின் பி மருந்தின் பற்றாக்குறை குறித்து சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியிடம் கலந்துரையாடினார்.
"மாநில அரசு கடைசியாக 16,000 அம்ஃபோடெரிசின் பி மருந்தை கொள்முதல் செய்தது. மருந்து பெறுவதற்கான உலகளாவிய டெண்டரும் வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த மருந்து விநியோகத்தை மத்திய அரசு நேரடியாக கட்டுப்படுத்தி வருகிறது. அடுத்த 10 நாட்கள் மிகவும் முக்கியமான நாட்கள். கவனக்குறைவாக இருந்தால் பல உயிர்களை இழக்க நேரிடும். எனவே, மகாராஷ்டிராவுக்கு அதிக எண்ணிக்கையிலான மருந்தை ஒதுக்குமாறு வலியுறுத்தியுள்ளோம், ”என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,69,000 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். புதிதாக 2,76,000 பேருக்கு தொற்று பாதிப்புக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது . இதன் மூலம், நாட்டில் தொடர்ந்து ஏழாவது நாளாக புதிய பாதிப்புகளை விட புதிதாக குணமடைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
பொது மக்கள் இ பதிவு (e-registration) குறித்த கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் இதர தகவல்களுக்கு கட்டணம் இல்லா 1100 என்ற எண்ணிற்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என TNeGA இயக்குனரகம் தெரிவித்தது.
மே 1 முதல் ஜூன் 15 வரை மொத்தம் 5,86,29,000 டோஸ்கள், மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்தது.
தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்துக் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில் ஜூன் மாத இறுதி வரை 4 கோடியே 87 லட்சத்து 55 ஆயிரம் டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நேரடிக் கொள்முதலுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை 860 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நெற்றி, மூக்கு, கன்னத்து எலும்புகள், கண்கள் மற்றும் பற்களுக்கு இடையில் அமைந்துள்ள காற்றுப் பைகளில் தோல் தொற்றுநோயாக மியூகோமிகோசிஸ் வெளிப்படத் தொடங்குகிறது.
கொரோனா நோயாளிகளுக்கு, நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் அல்லது அடக்கும் இம்யூனோமோடூலேட்டிங் மருந்துகளை நிறுத்துமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தியுள்ளது.
முறையான சுகாதாரமான சூழலை பராமரிப்பதும், இந்த பாதிப்பை தவிர்க்க உதவும். ஆக்ஸிஜன் சிகிச்சை எடுக்கும் நோயாளிகளுக்கு, ஹூயுமியூடிபயர் (humidifier) சாதனத்தில் தண்ணீர் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும், சீரான இடைவெளியில் தண்ணீர் மாற்றப்பட வேண்டும்.
நோயாளிகள், கை சுத்தம், உடல் சுத்தத்தை பராமரிக்க வேண்டும்.
"கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்து பயன்பாடு காரணமாக எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்
நீண்ட நாட்களாக ஐசியு-ல் இருந்தவர்கள்/ இணை நோய் உள்ளவர்கள்/ உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள்/ புற்றுநோய் / தீவிர பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்கள்" ஆகிய நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மியூகோமிகோசிஸ் பாதிப்பு அதிகம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்கான போராட்டத்தை தீவிர படுத்தி வரும் நிலையில், தற்போது, மியூகோமிகோசிஸ் என்ற பூஞ்சை தொற்று நோய் பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது . மகாராஷ்டிராவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மியூகோமிகோசிஸ் பாதிப்பு இருப்பதாகவும், 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மியூகோமிகோசிஸ் பாதிப்புக்கு என்ன காரணம்?
மியூகோமிகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை பாதிப்பு, பூஞ்சை தொற்று ( fungal infection) காரணமாக ஏற்படுகிறது. இந்த பூஞ்சை தொற்று தோலில் உள்ள காயங்கள் மூலம் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
தற்போது, கொரோனா நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைபவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடம் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. நிரிழிவு நோயாளிகளுக்கு, எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில்,தடுப்பூசி போடப்படும் தினசரி எண்ணிக்கை 35 லட்சமாக இருந்தது. மே மாதத் தொடகத்தில் இருந்து இந்தியாவில் தினசரி போடப்படும் தடுப்பூசி எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. சராசரி 15 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் நாளொன்றுக்கு போடப்படுகிறது.
நாட்டில் தடுப்பூசி உறபத்தி திறன் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில், தடுப்ப்பூசி நிர்வகிக்கப்படும் வேகம் சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தி வரும் முழு ஊரடங்கு காரணமாக தடுப்பூசியில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளதா? அல்லது தடுப்பூசி விநியோகத்தில் ஏதேனும் அடிப்படி குறைபாடு உள்ளதா? போன்ற கேள்விகள் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
மியூகோ மிகோசிஸ் எனப்படும் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்தின் தேவை அதிகரித்துள்ளதாகவும், மிகக் குறைந்த அளவிலான நிறுவனங்கள் மட்டுமே இதை விநியோகித்து வருவதாகவும் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தெரிவித்தார்.
மேலும், அரவிந்த் கண் மருத்துவமனைக்குக் கூட மருந்தின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யப்பட முடியவில்லை. மருத்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, அனைவரும் வீட்டில் தனித்து இருப்போம், முகக்கவசம் அணிவோம். இது பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இரண்டாவது அலையில் , தமிழகத்தில் 0-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 0-12 வயதுக்குட்பட்ட 1,307 குழந்தைகளுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே -26 அன்று கொரோனா உச்ச நிலை பாதிப்பை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மே - 26 அன்று தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 35,845 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்பின் , கொரோனா பாதிப்பு குறையைத் தொடங்கும். ஜூன் மாத இறுதி வாக்கில் தமிழகத்தின் தினசரி பாதிப்பு 12,000 என்ற அளவைத் தொடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Background
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பகுதிநேர அடிப்படையில் தன்னார்வத்தோடு மருத்துவ சேவைப்பணி செய்ய மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி ஆணையம் தெரிவித்தது. நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என்றும், மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து மூன்று மாதங்களுக்குப் பின் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் , முதல் டோஸ் பெற்று இரண்டாம் டோஸ் பெறுவதற்கு முன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களும் குணமடைந்து மூன்று மாதங்களுக்குப் பின் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொரோனா தடுப்பு மருந்து வழங்கலுக்கான தேசிய நிபுணர் குழுவின் புதிய பரிந்துரைகளை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -