இந்தியாவில் 50 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். அதில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அமைப்புசாரா துறையில் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பலன்களை அனைத்து தொழிலாளர்களுக்கும் உறுதி செய்யும் வகையில் புதிய தொழிலாளர் சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டது.


தொழிலாளர் சட்டங்கள்:


ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக புதிதாக 4 தொழிலாளர் சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், தொழிலாளர் விவகாரம் பொது பட்டியலில் இருப்பதால், இது தொடர்பான விதிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே வகுக்க வேண்டும். 


கடந்த 2020ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், தொழிலாளர் சட்ட விதிகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தாலும், சட்ட விதிகளை எந்த மாநிலமும் வகுக்கவில்லை. இதுவரை 12 மாநிலங்கள் மட்டுமே வரைவு விதிகளை வெளியிட்டுள்ளன. எனவே, அனைத்து மாநிலங்களும் சட்ட விதிகளை வகுக்க வேண்டும்.


ஊதியம் தொடர்பான சட்ட விதிகள்:


ஊதியம் தொடர்பான சட்ட விதிகள், கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டன. இது அனைத்து நிறுவனங்களுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறைகள் அனைத்துக்கும் பொருந்தும்.


அனைத்து ஊழியர்களுக்கும் சரியான நேரத்தில் ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதை இந்த விதி உறுதி செய்கிறது. வெவ்வேறு புவியியல் பகுதிகளுக்கு வித்தியாசமாக இருக்கும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு, ஊதியம் தீர்மானிக்கப்படுகிறது.


வேலை நேரம் தொடர்பான சட்ட விதிகள்:


புதிய தொழிலாளர் விதிகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 3 ஆண்டுகள் ஆன நிலையில், தமிழ்நாட்டில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ள வேலை நேரம் தொடர்பான மசோதா குறித்து கீழே காண்போம். 12 மணி நேர வேலை என்பது கட்டாயம் கிடையாது. அதாவது 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே கட்டாயம். அதில் எந்த மாற்றமும் கிடையாது.


12 மணி நேரம் வேலை செய்யலாமா? என்பதை தொழிலாளர்கள்தான் முடிவு செய்ய முடியும். தொழிலாளர்களின் ஒப்புதல் இருக்கிறதா? என்பதை பரிசீலனை செய்த பிறகே நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 


எத்தனை நாட்கள் விடுமுறை?


தினமும் 12 மணி நேரம் வேலை என வரும் போது, வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் அதுவும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை. அதுவும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தாது. மின்னணு நிறுவனங்கள், தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட சில துறைகள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் வரும்.


நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்யும் வசதி இருக்கிறதா, தொழிலாளர்களின் உடல்நலத்தை பாதிக்காத வகையில் இருக்குமா, போக்குவரத்து வசதி இருக்குமா என அனைத்தையும் ஆய்வு செய்த பிறகே அனுமதி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தொழிலாளர்களின் விருப்ப தேர்வாக மட்டுமே இருக்கும் என்பதால், அவர்களது அடிப்படை உரிமையை எந்த வகையிலும் இந்த மசோதா பாதிக்காது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.